சென்னை,
கூடலூர் பகுதியில் ஊருக்குள் நுழைந்து கால்நடைகளை சிறுத்தைகள் வேட்டையாடி வருவதோடு, மனிதர்களை புலிகள் தாக்கி வருகின்றன. வனப்பகுதியில் காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கை குறைவு காரணமாக, இதுபோன்ற சம்பவம் நடந்து வருகிறதா? என வன ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் அடர்ந்த காடுகளையும், தேயிலை தோட்டங்களையும் கொண்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே கூடலூர், ஓவேலி, நெல்லியாளம், பந்தலூர் ஆகிய பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் மற்றும் மனித-வனவிலங்கு மோதல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளன.
ஓவேலி லாரஸ்டனில் 2 பேரை புலி கடித்து கொன்றது. பின்னர் வனத்துறையினர் 2 புலிகளை பிடித்து சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு சென்றனர். இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூடலூர் நகராட்சிக்குட்பட்ட அள்ளூர் வயல் பகுதியில் கவுரி உள்ளிட்ட சில பழங்குடியின மக்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டனர். அப்போது அவர்கள் கண் எதிரே சிறுத்தை ஒன்று ஆட்டை கடித்து இழுத்து சென்றது.
இவ்வாறு வளர்ப்பு பிராணிகளை சிறுத்தைகள் கடித்து இழுத்து செல்லும் சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருகின்றன. இதனால் பொதுமக்கள் வனத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வனவிலங்குகள் ஊருக்குள் வரும் பிரச்சினையால் மக்கள் நிம்மதி இழந்துள்ளனர்.
இதனிடையே கடந்த ஓராண்டுக்கு முன்பு முதுமலை, கூடலூர் வனப்பகுதியில் பரவிய காய்ச்சல் காரணமாக காட்டுப்பன்றி கள் கொத்து கொத்தாக உயிரிழந்தன. இதனால் சிறுத்தை, புலிகள் அடர்ந்த காடுகளை விட்டு மக்கள் வாழும் இடங் களில் உள்ள கால்நடைகளை தேடி ஊருக்குள் வருகிறதா? என வன ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். பொதுவாக சிறுத்தை போன்ற மாமிச உண்ணிகளுக்கு காடுகளில் மிக எளிதாக கிடைக்கும் முதன்மை உணவு காட்டுப்பன்றி கள், புள்ளி மான்கள் ஆகும்.
ஆனால், முதுமலை மற்றும் கூடலூர் வனக்கோட்ட பகுதிகளில் பரவிய ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் காரணமாக காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக காட்டுப்பன்றிகள் நடமாட் டம் அடியோடு குறைந்துள்ளது. தற்போது நடுவட்டம் பகுதியில் சொற்ப எண்ணிக்கையில் காட்டுப்பன்றிகளை காண முடிகிறது.
காடுகளில் கிடைக்க வேண்டிய இயற்கை உணவு சங்கிலி உடைந்ததால், மாற்று உணவை தேட வேண்டிய கட்டாயத்திற்கு புலி, சிறுத்தைகள் தள்ளப்பட்டுள்ளன. ஊருக்குள் நுழைந்தால் மிக எளிதாக கிடைக்கக்கூடிய வளர்ப்பு நாய்கள், ஆடுகள், மாடுகள் மற்றும் கோழிகள் சிறுத்தைகளின் தற்போதைய இலக்காக மாறி உள்ளன. இதனால் சிறுத்தைகள் காட்டை விட்டு ஊருக்குள் வர மிக முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆணித்தரமாக குறிப்பிடுகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், காட்டுக்குள் சிறுத்தைகளுக்கு போதுமான இரை கிடைக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. அதனால் தான் பகல் நேரங்களில் தேயிலை தோட்டங்களிலும், இரவு நேரங்களில் வீட்டின் வாசல்களிலும் சிறுத்தைகள் படுத்து கிடக்கின்றன. எங்களின் உயிருக்கும், கால்நடைகளுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என்றனர்.
எனவே, வனப்பகுதியில் காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் எண்ணிக்கையை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வனத்துறை அதிகாரிகள் எடுக்க வேண்டும். ஊருக்குள் புகும் சிறுத்தைகளை துரிதமாக பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்று கூடலூர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.