தமிழக செய்திகள்

பட்டு விவசாயிகள் பயனடையும் வகையில் உரிய நேரத்தில் மானிய உதவிகள் - அமைச்சர் மதன்ராஜா

அமைச்சர் மதன்ராஜா தலைமையில் பட்டு வளர்ச்சித் துறை மற்றும் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

சென்னை,

பட்டு விவசாயிகள் பயனடையும் வகையில் உரிய நேரத்தில் வெளிப்படைத் தன்மையுடன் மானிய உதவிகள் வழங்க வேண்டும் என்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன்ராஜா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன்ராஜா தலைமையில், பட்டு வளர்ச்சித் துறை மற்றும் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இவ்வாய்வுக் கூட்டத்தில் பட்டுவளர்ச்சித்துறையின் செயல்பாடுகளை விரிவாக ஆய்வு செய்த அமைச்சர், பட்டு விவசாயிகள் பயனடையும் வகையில் உரிய நேரத்தில் வெளிப்படைத் தன்மையுடன் மானிய உதவிகள் வழங்க வேண்டும் எனவும், பட்டுக்கூட்டிற்கு பிந்தைய நிலையினை வலுப்படுத்திட படித்த வேலையில்லா இளைஞர்கள், தொழில்முனையும் மகளிர் ஆகியோரை பட்டுநூற்பு மற்றும் முறுக்கேற்றல் தொழிலில் ஈடுபடுத்தும் வகையில் துறை ரீதியான பயிற்சி வழங்கிடவும் அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் தொடர்பாக, தமிழ்நாட்டின் பாரம்பரியமான கைவினைப் பொருட்களின் விற்பனையை அதிகரிக்க தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் கைவினைஞர்களின் படைப்புகளை விற்பனை செய்வதற்கு வழிவகை செய்யுமாறு தெரிவித்தார். மேலும், இணையதளம் வழியாக அனைத்து வகையான கைவினைப் பொருட்களை கடந்த ஆண்டைவிட இரு மடங்கு அதிகமாக விற்பனை செய்யுமாறும் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் உற்பத்தி நிலையங்களில் தயாரிக்கப்பட்ட பஞ்சலோக சிலைகள், பித்தளை விளக்குகள், தஞ்சாவூர் கலைத் தட்டுகள், தஞ்சாவூர் ஓவியங்கள் மற்றும் இதர கைவினைப் பொருட்களை அமைச்சர் பார்வையிட்டார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.