தமிழக செய்திகள்

வைகாசி விசாகம்: திருச்செந்தூர் - நெல்லை பயணிகள் சிறப்பு ரெயில் அறிவிப்பு

வைகாசி விசாகம் வரும் 30-ம் தேதி வருகிறது.

சென்னை,

சாதாரண நாட்களிலேயே பக்தர்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் திருச்செந்துார் கோவிலுக்கு வைகாசி விசாகத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கானோர் வருவார்கள்.

திருச்செந்தூர் கோவில்

இந்தாண்டு விசாக விழா (மே 30) வார விடுமுறையில் வருவதால் அறுபடை வீடுகளில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இதன் எதிரொலியாக திருச்செந்துார், திருநெல்வேலி, துாத்துக்குடி செல்லும் ரெயில்களில்காத்திருப்போர் பட்டியல் அதிகம் காணப்படுகிறது.

வைகாசி விசாகம்

இந்தநிலையில், வைகாசி விசாகத்தையொட்டி திருச்செந்தூர் - நெல்லை பயணிகள் இடையே பயணிகள் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்ட அறிக்கையில்,

வைகாசி விசாகத்தையொட்டி திருச்செந்தூர் - நெல்லை இடையே மே 30-ல் முன்பதிவில்லா பயணிகள் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

மே 30 இரவு 11.30 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் ரெயில் மே 31 நள்ளிரவு 12.40 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும்.

மே 30-ம் தேதி இரவு 9 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்படும் ரெயில் அதே நாள் இரவு 10.30 மணிக்கு நெல்லை சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு ரெயில் விடப்பட்டுள்ளதால் பக்தர்கள் சிரமமின்றி வழிபாடு செய்துவிட்டு சொந்த ஊர்களுக்கு திரும்புவர்.