திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி விழா சூரசம்ஹார நிகழ்ச்சியின் போது 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்று மாவட்ட கலெக்டர் விஷூமகாஜன் கூறினார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு வருகிற 15-ந் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது. இதில் சுமார் 10 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை வசதி, சாலை மற்றும் போக்குவரத்து வசதிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு செய்து, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. பக்தர்களின் வசதிக்காக சுமார் 300 தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. கோவில் வளாகம் மற்றும் பக்தர்கள் அதிகம் கூடும் பகுதிகளில் விரதம் இருந்து வரும் பக்தர்களுக்கு வசதியாக 11 இடங்களில் பந்தல்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்துவதற்காக 3 இடங்களில் வாகன நிறுத்தும் இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. பக்தர்கள் வசதிக்காக கடந்த ஆண்டை விட 10 சதவீதம் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. பக்தர்களுக்கு ஏதேனும் குறைகள் அல்லது உதவிகள் தேவைப்பட்டால் தெரிவிப்பதற்காக 18004252077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டு உள்ளது. மக்களுக்கு எந்த உதவிகள் எந்த இடத்தில் கிடைக்கும் என்பதை அறியும் வகையில் வரைபடமும் வைக்கப்பட்டு உள்ளன. கியூஆர் கோடு ஸ்கேன் செய்வதன் மூலம் அதிகாரிகளை தொடர்பு கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
திருச்செந்தூர் கோவில் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் திருவிழா காலங்களில் அதிக அளவில் மக்கள் கூடுவதால் செல்போன் நெட்வொர்க் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனைத் தவிர்க்கும் வகையில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் சார்பில் இரண்டு கூடுதல் கோபுரங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
சூரசம்ஹார நிகழ்ச்சியின்போது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதற்காக சுமார் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பக்தர்கள் பாதுகாப்பாக வந்து செல்வதற்கும். கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.