தமிழக செய்திகள்

திருச்செங்கோடு அருகே சோகம்: கடன் தொல்லையால் தம்பதி தற்கொலை

கடன் பிரச்சினையால் தம்பதி மனமுடைந்து இருந்தனர்.

நாமக்கல்,

திருச்செங்கோடு அருகே, கடன் தொல்லையால் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தறிப்பட்டறை உரிமையாளர்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா கீழேரிப்பட்டி அருகே உள்ள தேவனாங்குறிச்சி கவுண்டர் தெருவில் வசித்து வந்தவர் சீனிவாசன் (45 வயது). இவர், கீழேரிப்பட்டியில் தறிப்பட்டறை ஒன்றை வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தார். அவருடைய மனைவி லீலாவதி (38 வயது). இவர்களுக்கு கீர்த்திவாசன் (22 வயது) என்ற மகனும், காவியா (19 வயது) என்ற மகளும் உள்ளனர்.

கீர்த்திவாசன் சென்னையில் தனியார் நிறுவனத்தில் மெக்கானிக் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். காவியா திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை சென்ற சீனிவாசன் மகனை பார்த்து விட்டு நேற்று முன்தினம் காலை வீட்டிற்கு வந்தார். இரவு சீனிவாசன், அவரது மனைவி லீலாவதி, மகள் காவியா ஆகிய 3 பேரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றார்கள்.

இந்த நிலையில் நேற்று காலை 5 மணிக்கு காவியா எழுந்து பார்த்தபோது பெற்றோரை காணவில்லை. அவர்கள் தறி பட்டறைக்கு சென்றிருப்பார்கள் என நினைத்த காவியா மீண்டும் தூங்க சென்றார். இதனிடையே காலை 6 மணி அளவில் தறி பட்டறை கட்டிடத்தின் உரிமையாளர் பரமசிவம், அந்த வழியாக சென்றபோது தறிப்பட்டறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அதேநேரத்தில் தறி ஓடிய சத்தம் கேட்கவில்லை.

தூக்கில் பிணம்

இதனால் அவர் உள்ளே ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது தறியில் பயன்படுத்தும் நாடாவால் சீனிவாசனும், அவருடைய மனைவி லீலாவதிவும் பிணமாக தொங்கி கொண்டிருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கடன் பிரச்சினை

தற்கொலை செய்து கொண்ட சீனிவாசனின் சொந்த ஊர் சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள அலவாய்ப்பட்டி ஆகும். இவர் குடும்பத்துடன் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள தேவனாங்குறிச்சிக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வந்தார். பின்னர் கீழேரிப்பட்டியில் தறி பட்டறையை வாடகைக்கு எடுத்து தொழில் செய்து வந்தார். கடன் பிரச்சினையில் சீனிவாசன் மனமுடைந்து இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் சீனிவாசன், மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

SCROLL FOR NEXT