தமிழக செய்திகள்

திருநெல்வேலி: இந்த ஆண்டில் இதுவரை 103 கஞ்சா வழக்குகளில் 131 பேர் கைது- காவல்துறை தகவல்

பொதுமக்கள் தங்களது குறைகள், குற்றச்சம்பவங்கள் தொடர்பான தகவல்களை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி.யிடம் நேரடியாக தெரிவிக்க 9498101740 என்ற பிரத்தியேக தொலைபேசி எண் சேவை தற்போது நடைமுறையில் உள்ளது.

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் கொலை, காய வழக்குகள் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது தனி கவனம் செலுத்தி காவல்துறையினர் துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையின் தொடர்ச்சியான நடவடிக்கையால் மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலை சுமுகமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே போதைப்பொருள் தடுப்பு, ஜாதி மோதலின் பின்விளைவுகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, சாலை பாதுகாப்பு மற்றும் சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஜாதி மோதல் மற்றும் பழிக்குப்பழி சம்பவங்களை தடுக்க பிரச்சினைக்குரிய பகுதிகளில் காவல்துறையினர் தினசரி நடை ரோந்து மேற்கொண்டு வருகின்றனர்.

மாவட்டம் முழுவதும் 8,786 சி.சி.டி.வி. கேமராக்கள் செயல்பாட்டில் உள்ளன. இந்த ஆண்டில் மட்டும் சுமார் 900 புதிய கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. "கிராமத்து காவல்” திட்டத்தின் மூலம் ஒவ்வொரு கிராமத்திற்கும் தனித்தனி காவலர் நியமிக்கப்பட்டு, பொதுமக்கள் தங்களது குறைகளை நேரடியாக தெரிவிக்கும் நடைமுறை செயல்பாட்டில் உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக பள்ளி, கல்லூரி மற்றும் பொதுஇடங்களில் தொடர்ச்சியான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டில் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 28 வழக்குகளில் 29 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரப்பட்டது. இந்த ஆண்டில் இதுவரை 10 போக்சோ வழக்குகளில் 10 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரப்பட்டுள்ளது. இதில் 1 நபருக்கு தூக்கு தண்டனை, 2 நபர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை, 2 நபர்களுக்கு ஆயுள் தண்டனை, 1 நபருக்கு 25 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு போக்சோ வழக்கில், 29 நாட்களுக்குள் புலவாய்வு மற்றும் நீதிமன்ற விசாரணை முடித்து குற்றவாளிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை பெற்றுத்தரப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் 6 போக்சோ வழக்குகளில் 10 நாட்களுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு தரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தொடர்புடைய 24 பேருக்கு சரித்திர பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் இந்த ஆண்டில் மட்டும் 14 பேருக்கு புதிய சரித்திர பதிவேடு தொடங்கப்பட்டுள்ளது. பெண்களை துன்புறுத்தல் தடைச் சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டில் 20 பேருக்கும், இந்த ஆண்டில் இதுவரை 3 பேருக்கும் பாதுகாப்பு ஆணை பெறப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக இந்த ஆண்டில் இதுவரை 103 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 131 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்குகளில் சுமார் 55.408 கிலோ போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் மட்டும் சுமார் 242.040 கிலோ கஞ்சா சட்ட விதிகளின்படி அழிக்கப்பட்டுள்ளது. கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய 14 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் இதுவரை கஞ்சா வழக்குகளில் சம்பந்தப்பட்ட 16 பேர் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 372 கல்வி நிலையங்களில் போதைப்பொருள் கண்காணிப்பு குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

விதிமுறைகளை மீறி செயல்படும் டாஸ்மாக் பார்கள் மீது வழக்குப்பதிவு மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டில் இதுவரை குற்ற வழக்குகளில் தொடர்புடைய 50 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 1,052 ரவுடிகள் தனி காவலர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 317 கிராமங்களில் இருந்த 2,115 ஜாதி வர்ணங்கள் உள்ளாட்சி அமைப்புகளின் ஒத்துழைப்புடன் அகற்றப்பட்டுள்ளன.

சமூக வலைதள கண்காணிப்பிற்காக தனிப்பிரிவு அமைக்கப்பட்டு, சாதி வன்மத்தை தூண்டும் மற்றும் அவதூறு பதிவுகள் மீது தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டில் இதுவரை சமூக வலைதளங்கள் தொடர்பாக 49 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 41 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்குகளில் தொடர்புடைய 47 சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. சைபர் கிரைம் குற்றங்களை தடுக்கும் வகையில் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் பணியிடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் ஆன்லைன் மோசடியில் ரூ.29.31 கோடி பண இழப்பு தொடர்பாக புகார்கள் பெறப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட 820 வங்கி கணக்குகளில் ரூ.19.15 கோடி முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 3.01 கோடி பண இழப்பு தொடர்பாக புகார்கள் பெறப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட 56 வங்கி கணக்குகளில் ரூ.36.68 லட்சம் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

கிரைன்டர் செயலி (Grindr App) மூலம் நடைபெறும் குற்றங்களை கட்டுப்படுத்த 115 நபர்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் குற்றச்சம்பவங்கள் தொடர்பான தகவல்களை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் (எஸ்.பி.) நேரடியாக தெரிவிக்க 9498101740 என்ற பிரத்தியேக தொலைபேசி எண் சேவை தற்போது நடைமுறையில் உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.