தமிழக செய்திகள்

திருநெல்வேலி: அரிவாளால் தாக்கி கொலை முயற்சி; குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியில் முன்விரோதம் காரணமாக பிரம்மதேசம் பகுதியை சேர்ந்த ஒருவரை, 2 பேர் சேர்ந்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சி செய்தனர்.

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே அரிவாளால் தாக்கி கொலை முயற்சி செய்த வழக்கில், குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அரிவாளால் தாக்கி கொலை முயற்சி

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே கடந்த 2019-ம் ஆண்டு முன்விரோதம் காரணமாக பிரம்மதேசம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 51) என்பவரை அதே பகுதியைச் சேர்ந்த மாயம்பெருமாள்(61) மற்றும் நடராஜன்(68) ஆகிய 2 பேரும் சேர்ந்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சி செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து, வழக்கின் விசாரணையானது அம்பாசமுத்திரம் உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

10 ஆண்டுகள் சிறை தண்டனை

இந்த நிலையில் மாயம்பெருமாள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, உதவி அமர்வு நீதிமன்ற நீதிபதி மருதுபாண்டி நேற்று (16.11.2026) குற்றவாளிக்கு கொலை முயற்சி குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தும், மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான நடராஜனை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார்.

எஸ்.பி. பாராட்டு

இந்த வழக்கில் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த அம்பாசமுத்திரம் உட்கோட்ட டி.எஸ்.பி. கணேஷ்குமார், அம்பாசமுத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல், இவ்வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரதாபன் (டி.எஸ்.பி., தற்போது ஓய்வு), நீதிமன்ற விசாரணைக்கு உதவி செய்த தலைமை காவலர் பிரபு மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் வரம்தரும் பெருமாள் பாண்டியன் ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா. சாஸ்திரி பாராட்டினார்.

SCROLL FOR NEXT