திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி அருகே 2021-ம் ஆண்டு முன்விரோதம் காரணமாக திருக்குறுங்குடியை சேர்ந்த ரசல்ராஜ் (வயது 63) அவரது மனைவி எப்சிபாய்(62) மற்றும் இவர்களது பேத்தியான 9 மாத குழந்தை ஆகிய 3 பேரையும் பணகுடி பகுதியை சேர்ந்த சிவசங்கர்(32) என்பவர் அரிவாளால் தாக்கியதில், குழந்தை சம்பவ இடத்தில் உயிரிழந்தும், மற்ற இருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக, திருக்குறுங்குடி காவல் நிலையத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி குற்றத்திற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து, வழங்கின் விசாரணையானது, திருநெல்வேலி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நீதிபதி செல்வம் வழக்கினை விசாரித்து குழந்தைக்கு மரணம் ஏற்படுத்திய குற்றத்தினை, கொலையாகாத மரணம் விளைவித்த குற்றம் எனத் தீர்மானித்து, நேற்று குற்றவாளிக்கு தண்டனை வழங்கினார்.
தண்டனை விபரம் பின்வருமாறு:
IPC 304 (ii)-ன்படி 10 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.5 ஆயிரம் அபராதம், IPC 307-ன்படி 10 ஆண்டுகள் சிறை தண்டனை 5 ஆயிரம் அபராதம் (2 முறைகள்), IPC 448-ன்படி 1 ஆண்டு சிறை தண்டனை ரூ.1,000 அபராதம் விதித்தும், மேலும் மேற்சொன்ன தண்டனைகளை குற்றவாளி ஏககாலத்தில் (concurrent) அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் திறம்பட சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த நாங்குநேரி உட்கோட்ட டி.எஸ்.பி. தர்ஷிகா நடராஜன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணா காந்தி மற்றும் திருக்குறுங்குடி காவல்துறையினர், இந்த வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதம் அலி (தற்போது வி.கே.புரம் காவல் நிலையம்), வழக்கில் விசாரணைக்கு உதவி செய்த தலைமை காவலர் சிதம்பரம் மற்றும் நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு வழக்கறிஞர் கருணாநிதி ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் பாராட்டினார்.
2026-ம் ஆண்டில் இதுவரை 2 கொலை வழக்குகளில் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. இதில் 3 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் சென்ற ஆண்டில் (2025) 27 கொலை வழக்கில் 105 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டது. அதில் ஒரு நபருக்கு மரண தண்டனையும் 98 நபர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. குறிப்பிடத்தக்கது. இதில் சரித்திர பதிவேடு உடையவர்கள் மட்டும் 28 நபர்கள் ஆவர்.
நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்படுத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் அமைப்பில் தொடர்ந்து உரிய சட்ட நடவடிக்கைகள் திருநெல்வேலி மாவட்ட காவல்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.