நெல்லை,
சர்க்கரை விலை அதிகரிப்பால் திருநெல்வேலி அல்வா விலை உயர்த்தப்பட்டு, ஒரு கிலோ ரூ.340-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அன்றாட வாழ்க்கையில் c (சீனி) அத்தியாவசியமாகி விட்டது. பல்வேறு இனிப்புகள் செய்யவும், குறிப்பாக தித்திக்கும் திருநெல்வேலி அல்வா தயாரிப்பதற்கும் சர்க்கரை முக்கிய பங்கு வகிக்கிறது. திருநெல்வேலி அல்வாவின் ருசிக்கு தாமிரபரணி தண்ணீர் பக்கபலமாக இருந்தாலும், சர்க்கரையும் அத்தியாவசிய தேவையாக உள்ளது.
சர்க்கரையின் தட்டுப்பாடு மற்றும் நுகர்வு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ சீனி ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் படிப்படியாக விலை உயர்ந்து நேற்று ரூ.75-க்கு விற்பனை ஆனது.
இதனால் திருநெல்வேலி அல்வா உள்ளிட்ட பல்வேறு இனிப்புகளின் விலையை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. நெல்லை சந்திப்பில் உள்ள பிரபல மிட்டாய் கடையில் ஒரு கிலோ அல்வா ரூ.320-ல் இருந்து ரூ.20 விலை உயர்த்தப்பட்டு ரூ.340-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர மற்ற இனிப்பு வகைகள், மிக்சர். காரசேவு போன்ற கார வகைகளும் ரூ.20 உயர்த்தப்பட்டு ரூ.340-க்கு விற்கப்படுகிறது. இதேபோல் ஒரு கிலோ சிப்ஸ் ரூ.20 உயர்த்தப்பட்டு ரூ.380 ஆகவும், பால்கோவா ரூ.500, பால் அல்வா ரூ.500, ஸ்பெஷல் மைசூர் பாகு ரூ.540 ஆகவும் விற்கப்படுகிறது.
நெல்லை சந்திப்பில் உள்ள மற்றொரு பிரபல கடையில் ஏற்கனவே ஒரு கிலோ அல்வா ரூ.340-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது தவிர நெல்லை டவுன் கீழ ரதவீதியில் உள்ள இருட்டுக்கடை அல்வா ரூ.440-க்கும். அதையொட்டி கீழ ரதவீதியில் அமைந்துள்ள மிட்டாய் கடைகளில் அல்வா ரூ.360-க்கும். கல்லத்தி முடுக்கில் உள்ள 2 கடைகளில் அல்வா ரூ.360-க்கும் தற்போது விற்பனை செய்யப்படுகிறது.
இதன் விலையை கிலோவுக்கு ரூ.40 வரை உயர்த்த பரிசீலனை செய்து வருவதாகவும், அது தொடர்பாக ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.