நெல்லை,
திருநெல்வேலி மாவட்டம் பிரான்ஞ்சேரி அருகே அரசு பேருந்தும் மண் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், பேருந்து நடத்துநர் உயிரிழந்தார். 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
நெல்லை - தூத்துக்குடி நெடுஞ்சாலையில் பிரான்சேரி அருகே அரசுப் பேருந்து ஒன்று 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே அதிவேகமாக வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, அரசுப் பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் பேருந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றி வந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஜித் மெல்வின் ஆர்தர் (52) என்பவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பேருந்தில் பயணித்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்துத் தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டுச் சிகிச்சைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.