தமிழக செய்திகள்

திருநெல்வேலி: கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

அம்பாசமுத்திரம் அருகே முன்விரோதம் காரணமாக பிரம்மதேசம் பகுதியை சேர்ந்த ஒருவரை, அதே பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் அரிவாளால் தாக்கி கொலை செய்தார்.

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே கடந்த 2019-ம் ஆண்டு முன்விரோதம் காரணமாக பிரம்மதேசம் பகுதியை சேர்ந்த ராஜகோபால் (வயது 56) என்பவரை அதே பகுதியைச் சேர்ந்த கணேசன்(45) என்பவர் அரிவாளால் தாக்கி கொலை செய்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அம்பாசமுத்திரம் காவல் நிலைய முந்தைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி புலன் விசாரணை மேற்கொண்டு கணேசனை கைது செய்தார்.

புலன் விசாரணை முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து, வழக்கின் விசாரணையானது திருநெல்வேலி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் (எண்- IV) நடைபெற்று வந்த நிலையில், கணேசன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு நீதிபதி கதிரவன் நேற்று குற்றவாளிக்கு தண்டனை வழங்கினார்.

தண்டனை விவரம் பின்வருமாறு:

IPC 302-படி ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம்.

IPC 449-படி 6 மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம்.

IPC 294(b)-படி ரூ.500 அபராதம், கட்ட தவறினால் 1 மாதம் சிறை தண்டனை.

IPC 324-படி 6 மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம்.

IPC 506 (ii)-படி 1 மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். மேலும் மேற்சொன்ன தண்டனைகளை குற்றவாளி ஏக காலத்தில் (Concurrent) அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் திறம்பட சாட்சிகளை நீதிமனறத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தந்த அம்பாசமுத்திரம் டி.எஸ்.பி. கணேஷ்குமார், அம்பாசமுத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகமேல், இந்த வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி (தற்போது தென்காசி மாவட்டம்), வழக்கின் விசாரணைக்கு உதவி செய்த பெண் ஏட்டு செல்வி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர சிறப்பாக வாதிட்ட அரசு வழக்கறிஞர் காளிமுத்து ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிராண்ணகுமார் பாராட்டினார்.

2026-ம் ஆண்டில் இதுவரை 4 கொலை வழக்குகளில் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு 8 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. இதில் 3 சரித்திர பதிவேடு உடைய குற்றவாளிகள் உள்பட7 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் சென்ற ஆண்டில் (2025) 27 கொலை வழக்குகளில் 105 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டது. அதில் ஒரு நபருக்கு மரண தண்டனையும், 98 நபர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் சரித்திர பதிவேடு உடையவர்கள் மட்டும் 28 நபர்கள் ஆவர். திருநெல்வேலி மாவட்ட காவல்துறையானது, நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்ப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரும் முனைப்பில் தொடர்ந்து உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.