தமிழக செய்திகள்

திருநெல்வேலி: சிறுமிகளிடம் ஆபாச செயல்; குற்றவாளிக்கு ஒரு ஆண்டு சிறை

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியில் ஒருவர், இரண்டு சிறுமிகளிடம் ஆபாச செயலில் ஈடுபட்டுள்ளார்.

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியில் இரண்டு சிறுமிகளிடம் ஆபாசமாக நடந்து கொண்ட வழக்கில் குற்றவாளிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சிறுமிகளிடம் ஆபாச செயல்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு, சிவந்திபுரத்தை சேர்ந்த மாயாண்டி (வயது 45) என்பவர் இரண்டு சிறுமிகளிடம் ஆபாச செயலில் ஈடுபட்டுள்ளார்.

போக்சோ வழக்குப்பதிவு

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா புலன் விசாரணை மேற்கொண்டார். புலன் விசாரணையின் முடிவில், நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கின் விசாரணை திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

ஒரு ஆண்டு சிறை தண்டனை

இந்த நிலையில் மேற்சொன்ன நபருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, நீதிபதி சுரேஷ்குமார் குற்றவாளிக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகளுக்கும் தலா ரூ.25 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.

எஸ்.பி. பாராட்டு

இந்த வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்ட அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனிதா, வழக்கின் விசாரணைக்கு உதவி செய்த நீதிமன்ற காவலர் முத்துகிளி, வழக்கில் திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் உஷா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா. சாஸ்திரி பாராட்டினார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு

தமிழ்நாடு காவல்துறை மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT