திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆலங்காயம் பெத்தூர் பகுதியை சேர்ந்த முன்னாள் கிராம நிர்வாக அலுவளர் பிரகாசத்திற்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தில் பிரகாசம் இருக்கும் கிணற்றில் இரண்டு சடலங்கள் மிதந்ததை கண்டு பிரகாசம் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது குறித்து அவர் ஆலங்காயம் காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கிணற்றுக்குள் கிடந்த 2 சிறுவர்களின் சடலங்களையும் மீட்டனர். மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு சுமார் 9 மற்றும் 15 வயது இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
தொடர்ந்து 2 சிறுவர்களின் சடலங்களையும் வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். சிறுவர்களின் அடையாளம் தெரியாத நிலையில், அப்பகுதியில் உள்ள விடுதிகளில் மாணவர்கள் யாரேனும் காணாமல் போயுள்ளனரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவர்கள் கிணற்றில் தவறி விழுந்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.