திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதி அருகே பட்டப்பகலில் நிகழ்ந்த இரட்டைக் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலையைச் செய்த இளைஞரை தனிப்படை போலீசார் 8 மணி நேரத்திற்குள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூா் மாவட்டம், தோரணம்பதி அடுத்த வெங்கடேஸ்வரா நகரில் காலி வீட்டு மனைகள் விற்பனைக்காக போடப்பட்டுள்ளன. இதை பலா் நேரில் வந்து பாா்த்துவிட்டுச் சென்று வருகின்றனா். இந்த நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மதியம் சுமார் 1:30 மணியளவில், அந்த பகுதிக்கு காரில் வந்த ஒரு பெண்ணும், ஆணும் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். சம்பவ இடத்திலேயே இருவரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட ஆண் திருவண்ணாமலை மாவட்டம், பாச்சல் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் ரஞ்சித்குமார் (வயது 30) என்பதும், பெண் திருப்பத்தூர் மாவட்டம், ப.முத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிரஞ்சீவி என்பவரின் மனைவி மாலினி (வயது 30) என்பதும் தெரியவந்தது.
பட்டப்பகலில் நடந்த இந்த கொடூரச் சம்பவம் குறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்சய் அனில் வாகரே உத்தரவின் பேரில், டிஎஸ்பி முரளி மற்றும் ஆய்வாளர் ஜான் பிரிட்டோ தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதனிடையே, கொலை சம்பவத்திற்குப் பிறகு தப்பியோடிய சஞ்சீவ் காந்தி என்பவர் திருவண்ணாமலையில் பதுங்கியிருப்பதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு விரைந்த தனிப்படை போலீசார், சம்பவம் நடந்த 8 மணி நேரத்திற்குள் சஞ்சீவ் காந்தியை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சஞ்சீவ் காந்தியிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கொலை செய்யப்பட்ட மாலினிக்கும், சஞ்சீவ் காந்திக்கும் இடையே பள்ளிப் பருவத்திலிருந்தே பழக்கம் இருந்துள்ளது. இது நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக (கள்ளக்காதல்) மாறியுள்ளது.
இதற்கிடையே, மாலினிக்குத் திருவண்ணாமலை மாவட்டம் பாச்சல் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமாருடனும் பழக்கம் ஏற்பட்டு நெருக்கமாக இருந்துள்ளார். சம்பவத்தன்று மாலினியும் ரஞ்சித்குமாரும் காரில் தோரணம்பதி அருகே உள்ள தனியார் காலிமனைக்கு சென்றதை அறிந்த சஞ்சீவ் காந்தி, கடும் ஆத்திரமடைந்து அவர்களைப் பின்தொடர்ந்து சென்று சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.