திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் பொன்னியம்மன் கோயில் தெருவை சேர்த்தவர் ஷான்பாஷா இவரது மகன் சதாம்உசேன் (வயது30). இவர் நேற்று காலை திருப்பத்தூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்றார்.
அங்கு ஒரு பெண் காவலர் பணியில் இருந்தார். அப்போது பெண் காவலர் அருகே சென்ற சதாம் உசேன் ஆபாச வார்த்தைகளால் பேசி தனது செல்போனில் இருந்த ஆபாச படங்களை காண்பித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் காவலர் கத்தி கூச்சலிட்டார். அந்த நேரத்தில் வெளியில் சென்ற சில போலீசார் காவல்நிலையத்திற்கு வந்தனர். அவர்களை பார்த்தவுடன் அந்த வாலிபர் தப்பி ஓடினார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவலர் திருப்பத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் சதாம்உசேனை கைது செய்தனர். அவரை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.