சென்னை,
தவெக அரசு கடந்த திமுக ஆட்சியை விட இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதில் ஒருபடி மேலே சென்று விட்டது என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
தீபத்தூணில் தீபம் ஏற்றிவிடுவார்களோ என்ற அச்சத்தில், கடந்த ஆண்டு தீபம் ஏற்ற எதிர்ப்பு தெரிவித்தவர்களையும், இந்து மதத்தைச் சாராத ரெஜினா என்பவரையும் அறங்காவலர் குழுவில் இடம்பெறச் செய்திருப்பதாக சுப்ரீம்கோர்ட்டில் முருக பக்தரான மனுதாரர் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. இப்படி தவெக அரசு அவசர அவசரமாக அறங்காவலர் குழுவை மாற்றியமைத்ததன் பின்னணி என்ன?
இவ்வளவு சர்ச்சைகளுக்கு மத்தியில் பதில் சொல்ல வேண்டிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்
ரமேஷின் மௌனமும், கோவில் பட்டர்களின் இரண்டாவது விளக்கக் கடிதம் மிரட்டலின் பேரில் பெறப்பட்டதா என்ற சந்தேகமும் பல கேள்விகளை எழுப்புகின்றன. அந்நியன் படத்தில் வரும் கதாபாத்திரம் போல் அவ்வப்பொழுது தனது நிலைப்பாட்டை மாற்றி மாற்றி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் தவெக அரசு கடந்த திமுக ஆட்சியை விட இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதில் ஒருபடி மேலே சென்று விட்டது.
நீதிமன்றத்தையும், பக்தர்களின் நம்பிக்கையையும் மதிக்காமல் தொடர்ந்து அரங்கேற்றப்படும் இந்தக் கபட நாடகம் தமிழக மக்களிடம் ஆறு மாதங்களிலேயே நம்பிக்கையை இழந்துவிட்ட தவெக அரசின் வீழ்ச்சிக்கான தொடக்கம்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.