மதுரை,
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் இன்று தீபம் ஏற்றப்பட உள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உள்ள மலையில் தீபத்தூணில் கார்த்திகை தீபத்திருநாளன்று தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட்டு கடந்த ஆண்டு உத்தரவிட்டது. அந்த உத்தரவை கடந்த திமுக அரசு நிறைவேற்றவில்லை. மேலும், அந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. தற்போதைய தவெக அரசும், கடந்த திமுக அரசின் நிலைப்பாடான தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு எதிரான நிலைப்பாட்டிலேயே உள்ளது.
அதேவேளை, திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உள்ள மலையில் தீபத்தூணில் நவம்பர் 24ம் தேதி கார்த்திகை தீபத்திருநாளன்று ஒருமுறை தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவை தமிழக அரசு நிறைவேற்றவில்லை.
இதையடுத்து, திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவை நிறைவேற்றாத மதுரை மாவட்ட கலெக்டர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை நேற்று விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் இன்று தீபம் ஏற்ற உத்தரவிட்டது. மேலும், திருப்பரங்குன்றம் மலை முழுவதும் சிஆர்பிஎப் படையின் கட்டுப்பாடிற்குள் கொண்டுவர உத்தரவிட்டது. மலையில் உள்ள தர்காவில் இருந்து 50 மீட்டர் தொலைவு வரை கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பக்தர்கள் அனைவரும் சென்று தீபம் ஏற்றலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் தலைமையிலான குழு தீபம் ஏற்றும் நேரத்தை முடிவு செய்ய சுப்ரீம் கோட்டு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட நிலையில் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் இன்று தீபம் ஏற்றப்பட உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி முருகன் கோவில் மலை மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. மலையில் உள்ள தர்காவில் இஸ்லாமிய மதத்தினர் வழிபாடு நடத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
தீபத்தூணில் தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட நிலையில் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் இன்று அதிகாலை முதல் முருக பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். தீபத்தூணில் இன்று மாலை 6 மணியளவில் தீபம் ஏற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.