திருப்பூர்,
திருப்பூர் ஆயுதப்படையில் பணிபுரிந்த பெண் போலீஸ், காவலர் குடியிருப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதற்கு பணிச்சுமை காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தைச் சேர்ந்த ராஜாவின் மகள் ரஞ்சனி (வயது24). கடந்த 2022-ம் ஆண்டு போலீஸ் வேலையில் சேர்ந்தார். கடந்த 4 ஆண்டுகளாக திருப்பூர் ஆயுதப்படையில் பணியாற்றி வந்தார். அங்குள்ள நல்லூர் காவலர் குடியிருப்பில் தங்கி பணிபுரிந்து வந்த ரஞ்சனி, நேற்று காலை வழக்கம்போல் பணிக்கு சென்றார். பின்னர் 10.30 மணியளவில் வீட்டுக்கு வந்த அவர் திடீரென சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதற்கு முன்னதாக, குடியிருப்புக்கு திரும்பிய ரஞ்சனி, யாருடனோ செல்போனில் ஆவேசமாகப் பேசியபடி வந்துள்ளார். பின்னர், தன் அறைக்குச் சென்று கதவை உள்புறமாகப் பூட்டிக்கொண்டவர், முன் பழகிய பெண் போலீஸ் ஒருவருக்குத் தொடர்பு கொண்டு தற்கொலை செய்யப்போவதாகக் கூறியுள்ளார். இதனால் பதறிய அந்த பெண் போலீஸ், குடியிருப்புவாசிகளுக்குத் தகவல் தெரிவித்தார். அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ரஞ்சனி தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரஞ்சனியின் அறை அலங்கோலமாகக் கிடந்தது. அங்கிருந்த பொம்மைகள் மற்றும் பொருட்கள் உடைக்கப்பட்டிருந்தன. இதனால் அவர் கடும் மன உளைச்சலில் இருந்தது தெரியவந்தது.
ரஞ்சனியின் செல்போன் பூட்டப்பட்டுள்ளதால், அதை ஆய்வு செய்ய நிபுணர்களின் உதவி நாடப்பட்டுள்ளது. அவருடன் ஒரே ஆண்டில் பணியில் சேர்ந்த ஒரு காவலருடன் அவருக்குப் பழக்கம் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், காதல் தகராறு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதா? அல்லது பணிச்சுமையா? என்ற கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.