தமிழக செய்திகள்

திருப்பூர்: மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான அரசு பஸ்.!

காரின் மீது மோதாமல் இருக்க டிரைவர் பஸ்சை இடதுபுறமாக திருப்ப முயன்றபோது மரத்தில் மோதியது.

திருப்பூர்,

கோவையில் இருந்து திருப்பூருக்கு அரசு பஸ் ஒன்று 55 பயணிகளுடன் புறப்பட்டது. அந்த பஸ்சை, தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த ஜெயராஜ் (வயது 45) என்பவர் ஓட்டினார். கண்டக்டராக திருப்பூர் மாவட்டம் பாண்டியன் நகரை சேர்ந்த சண்முகம் (50) இருந்தார். பல்லடம்-திருப்பூர் சாலையில் நேற்று காலை பஸ் வந்து கொண்டிருந்தது. மகாலட்சுமிநகர் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது முன்னால் சென்றுகொண்டிருந்த கார் திடீரென பிரேக் போட்டதாக தெரிகிறது. இதனால் பஸ், காரின் மீது மோதாமல் இருக்க டிரைவர் பஸ்சை இடதுபுறமாக திருப்ப முயன்றார்.

இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த பயணிகள் காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தொடர்ந்து மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு பயணிகள் திருப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து, மரத்தில் மோதிய பஸ்சை பல்லடம் தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர். இதுகுறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.