திருப்பூர்,
திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் அரசு டிக்கெட் பரிசோதகரும், தனியார் பஸ் டிரைவரும் மோதிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து ஈரோடு செல்லவேண்டிய தனியார் பஸ் இன்று மதியம் ஒதுக்கப்பட்ட நேரத்தை கடந்தும் புறப்படாமல் பஸ் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதைக்கண்ட அரசு பஸ் டிக்கெட் பரிசோதகர் முத்தையன், சம்மந்தப்பட்ட தனியார் பஸ் டிரைவர் குமார், கண்டெக்டர் குணசேகரனிடம் சென்று பஸ்சை எடுக்குமாறு கூறியுள்ளார்.
அப்போது, அரசு பஸ் டிக்கெட் பரிசோதகருக்கும், தனியார் பஸ் டிரைவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த தனியார் பஸ் டிவரைவர் குமார், கண்டெக்டர் குணசேகரன் இணைந்து டிக்கெட் பரிசோதகர் முத்தையனை சரமாரியாக தாக்கினர். இதற்கு முத்தையனும் இருவர் மீதும் சரமாரியாக தாக்கினர். இதனால், 3 பேரும் திருப்பூர் மத்திய பஸ் நிலையத்திற்குள் மோதிக்கொண்டனர்.
இந்த மோதல் குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து சென்று மோதலை தடுத்து நிறுத்தினர். பின்னர் மோதலில் காயமடைந்த அரசு பஸ் கண்டெக்டர் முத்தையனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த மோதல் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மோதலில் ஈடுபட்ட தனியார் பஸ் டிரைவர் குமார், கண்டெக்டர் குணசேகரைன் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.