திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மனைவியிடம் வரதட்சணையாக பிரேஸ்லெட் கேட்டு கணவர் தொந்தரவு செய்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டார்.
தாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சிதா (வயது 32). இவருக்கு கந்தசாமி (வயது 36) என்பவருடன் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர். திருமணத்தின் போது உரிய சீர்வரிசைகள் செய்யப்பட்ட போதிலும், கந்தசாமி தொடர்ந்து ரஞ்சிதாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தி வந்ததார்.
சமீபகாலமாக, தனக்கு வரதட்சணையாக ஒரு தங்க பிரேஸ்லெட் வாங்கித் தருமாறு ரஞ்சிதாவை கணவர் கந்தசாமி கடுமையாக வற்புறுத்தி வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது. கணவரின் தொடர் வற்புறுத்தலால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான ரஞ்சிதா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
ரஞ்சிதாவின் மரணச் செய்தியைக் கேட்டு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவர்கள் தாராபுரம் பகுதியில் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வரதட்சணை கொடுமை குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தாராபுரம் போலீசார் விரைந்து சென்றனர். பின்னர் அவர்களை சமாதானம் செய்து ரஞ்சிதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த மரணம் குறித்து வரதட்சணை கொடுமை மற்றும் தற்கொலைக்குத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கணவர் கந்தசாமியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.