விபத்து 
தமிழக செய்திகள்

திருப்பூர்: இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி 2 பேர் உயிரிழப்பு

இந்த விபத்து சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில், இளைஞர் உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து குறித்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து நடந்தது எப்படி?

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் உள்ள சாலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இருசக்கர வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்த் திசையில் அதிவேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக இந்த வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியது.

2 பேர் உயிரிழப்பு

இந்த கோர விபத்தில் இருசக்கர வாகனங்களில் பயணித்த இளைஞர் பாலாஜி (20 வயது) மற்றும் சுந்தரம் (50 வயது) ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதில் இருவருக்கும் தலை மற்றும் உடலில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்கள் இருவரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

சிசிடிவி காட்சிகள் -விசாரணை

விபத்து நடந்த இடத்திற்கு அருகிலிருந்த கண்காணிப்பு கேமராவில் இந்த விபத்து காட்சிகள் பதிவாகியிருந்தன. இந்த பதைபதைக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காங்கேயம் போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT