முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 5-ம் படைவீடாக திகழ்வது திருத்தணி முருகன் கோவில். தமிழகம் மட்டுமின்றி. ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் இந்த கோவிலுக்கு வந்து செல்வது வழக்கம். குறிப்பாக ஆடி கிருத்திகை, தைப்பூசம், திருப்புகழ் திருப்படி திருவிழா உள்ளிட்ட விசேஷ நாட்களிலும், வாரவிடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும். கோடை விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதால் நேற்று திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கூட்ட நெரிசலின்றி பொது வழியில் விரைவாக தரிசனம் செய்தனர்.
திருத்தணி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை), ஜூன் 13 (சனிக்கிழமை) வைகாசி மாத கிருத்திகை ஜூன் 14 (ஞாயிற்றுக்கிழமை), ஜூன்21 (ஞாயிற்றுக்கிழமை), ஜூன் 24 (புதன்கிழமை). ஜூன் 25 (வியாழக்கிழமை) முகூர்த்த தினம், ஜூன் 26 (அரசு விடுமுறை), மற்றும் ஜூன் 28 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 8 நாட்களில் நடைபெறும் விழாக்களில் கலந்து கொள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகன் கோவிலுக்கு வருவார்கள் என்பதால் மேற்கண்ட 8 நாட்களில் மலைக்கோவில் மேல் ஆட்டோக்கள் செல்ல கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இட வசதிக்கேற்ப கார்கள் இயக்கப்படும். மலைக்கோவில் நுழைவுபகுதியில் இருந்து படா செட்டிகுளம் வரை பக்தர்கள் கட்டணமின்றி கோவில் பஸ்களில் பயணம் செய்யலாம். இரு சக்கர வாகனங்களில் பக்தர்கள் மலைக்கோவில் மேல் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.