திருவண்ணாமலை,
திருவண்ணாமலை ராஜகோபுரம் முன்பாக பொது சுகாதாரத்துறை சார்பில் அவசரகால மீட்பு ஒத்திகை நடைபெற்றது.
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை வரும் திருவண்ணாமலையில் நவம்பர் 24-ந்தேதி தேதி 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதைக் காண 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையொட்டி தீ விபத்து மற்றும் கூட்ட நெரிசல் போன்ற அவசர சூழல்களில் காயமடைந்தவர்களை மீட்பது குறித்து இன்று கோவில் ராஜகோபுரம் முன்பு பொது சுகாதாரத்துறை சார்பில் அவசரகால மீட்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளித்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது போன்ற காட்சிகள் செயல்முறையாக விளக்கப்பட்டன. மாவட்ட கலெக்டர் வந்தனா கார்க் ஒத்திகையை பார்வையிட்டார். அவசர நேரங்களில் பொதுமக்கள் பதற்றமடையாமல் மீட்புக் குழுவினருக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.