தமிழக செய்திகள்

திருவண்ணாமலை: கியாஸ் சிலிண்டர்கள் ஏற்றி வந்த மினி வேன் கவிழ்ந்து விபத்து!

சிலிண்டர்கள் மண் தரையில் உருண்டு சென்றதால் விபரீதம் ஏற்படாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

திருவண்ணாமலை,

படவேடு அருகே கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிச்சென்ற மினிவேன் கவிழ்ந்ததில் காயங்களுடன் டிரைவர் தப்பினார். சிலிண்டர்கள் மண் தரையில் உருண்டதால் விபரீதம் தவிர்க்கப்பட்டது.

கியாஸ் சிலிண்டர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகாவில் உள்ள படவேடு ஊராட்சியானது 20-க்கும் மேற்பட்ட சிறு கிராமங்களை உள்ளடக்கியதாகும். இந்த கிராமங்களுக்கு படவேடு பகுதியில் இயங்கி வரும் தனியார் ஏஜென்சி நிறுவனம் மூலம் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

நேற்று காலை படவேடு பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு வினியோகிப்பதற்காக கியாஸ் சிலிண்டர்கள் மினி வேனில் எடுத்துச்செல்லப்பட்டது. அர்ஜுனாபுரம் -நொளம்பூர் கிராம சாலையில் சென்று கொண்டிருந்தபோது அளவுக்கு அதிகமான பாரம் தாங்க முடியாமல் மினிவேனானது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து ஓடி கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிறு காயங்களுடன் டிரைவர் உயிர் தப்பினார்.

மண் தரையில் உருண்டன

மேலும் சிலிண்டர்கள் மண் தரையில் உருண்டு சென்றதால் விபரீதம் ஏற்படாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சம்பவ இடத்தில் ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் உருண்டு சென்ற சிலிண்டர்களை ஒரே இடத்தில் வரிசையாக அடுக்கி வைத்தனர். அதனை தொடர்ந்து மீட்பு எந்திரம் வரவழைக்கப் பட்டு மினி வேன் தூக்கி நிறுத்தப்பட்டு சிலிண்டர்களை ஏற்றி பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டன.

SCROLL FOR NEXT