சென்னை,
தமிழக அரசின் நீர்வளத்துறை செயலாளர் ஜெயகாந்தன் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்திருப்பதாவது:-
திருவண்ணாமலை மாவட்டம் தென்பெண்ணையாற்றை சாத்தனூர் அணைக்கட்டில் செய்யாற்றின் வழியாக பாலாற்றுடன் இணைத்து நந்தன் கால்வாய்க்கு பாசன வசதி அளிக்கும் திட்டத்திற்கு செங்கம் மற்றும் தண்டாரம்பட்டு வட்டங்களில் 354.01 ஏக்கர் பரப்பளவு நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த நிலங்களை எடுத்துத்தரக் கோரி வேலூர் வடிவமைப்பு கோட்ட செயற்பொறியாளரிடம் இருந்து நில திட்ட அட்டவணை வரப்பெற்றுள்ளது.
இந்த நிலம் கையகப்படுத்தும் பணிக்கு ரூ.42 கோடியே 69 லட்சத்து 50 ஆயிரத்து 310 நிதி ஒதுக்கி ஆணையிடப்படுகிறது. இந்த புதிய கால்வாய் திட்டத்தின் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 22 ஏரிகள் பயனடையும். நந்தன் கால்வாயை மேம்படுத்துவதன் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 ஏரிகளுக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் 22 ஏரிகளும் என மொத்தம் 58 ஏரிகளுக்கும் நீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.