தமிழக செய்திகள்

அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா.வின் தொகுதிகள் முடிவு - ஜி.கே.வாசன் அறிவிப்பு

த.மா.கா. கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது தொடர்பான பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளதாக ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

சென்னை,

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. ஏப்ரல் 23-ந் தேதி நடைபெறவுள்ள தேர்தலுக்கு வருகிற 30-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.தேர்தல் நெருங்குவதால் ஆளும் தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீட்டை ஏறக்குறைய முடித்துவிட்டது. ஒரு சில கட்சிகளுடன்தான் பாக்கியுள்ளது.

எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., அ.ம.மு.க., த.மா.கா., இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, புரட்சி பாரதம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்தநிலையில் தமிழக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயல் நேற்று சென்னை வந்தார். பின்னர் கூட்டணி கட்சி தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர், பா.ஜனதாவுக்கு 27 தொகுதி கள், பா.ம.க.வுக்கு 18 தொகுதிகள், அ.ம.மு.க.வுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக அறிவித்தார். தொகுதி உடன்பாடு ஒப்பந்தத்தில் எடப்பாடி பழனிசாமியும், அந்தந்த கட்சிகளின் தலைவர்களும் கையெழுத்திட்டனர்.

இதனிடையே அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா.வுக்கு கடந்த முறை 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. 6 தொகுதிகளிலும் தோல்வியுற்றதால், இந்த முறை த.மா.கா.வுக்கு 3 தொகுதிகள் மட்டும் ஒதுக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. எனவே இந்த ஆலோசனை கூட்டத்தில் பியூஷ் கோயலிடம் தனது அதிருப்தியை ஜி.கே.வாசன் வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது

ஆலோசனையில் பங்கேற்ற பின்னர் அவர் நிருபர்களிடம், 'த.மா.கா. நிர்வாகிகள், தொண்டர்கள் விருப்பத்துக்கு ஏற்ப தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று விரிவாக பேசி இருக்கிறேன். நல்ல முடிவு எடுப்பார்கள் என்று நம்புகிறேன்' என்று தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது தொடர்பான பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்திருக்கும் பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-

அ.இ.அ.தி.மு.க மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தொகுதி பங்கீட்டில் த.மா.கா(மூ) வின் எண்ணிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்பட்டது. நேற்று (23.03.2026, திங்கட்கிழமை) இரவு, நான் சென்னையில், மத்திய மந்திரியும், தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் அவர்களை சந்தித்தேன்.

நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் அ.இ.அ.தி.மு.க மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தொகுதி பங்கீட்டில் த.மா.கா(மூ) வின் எண்ணிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்பட்டது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.