சென்னை,
234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு கடந்த 23ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவும் நிலையில் ஆட்சியை கைப்பற்றபோவது யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதேவேளை, வாக்குப்பதிவு நிறைவடைந்த உடன் அன்றைய தினமே (ஏப்ரல் 23) வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பான அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் 4ம் தேதி எண்ணப்பட உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, வாக்கு எண்ணிக்கைக்காக மாநிலம் முழுவதும் மொத்தம் 62 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக மதுரையில் 5 வாக்கு எண்ணிக்கை மையங்களும், சேலம், கடலூரில் தலா 4 வாக்கு எண்ணிக்கை மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.