தமிழக செய்திகள்

74 ஆண்டு கால சட்டசபை தேர்தல் வரலாறு: தமிழகத்தில் 85 சதவீத வாக்குகள் பதிவாகி புதிய சாதனை

தமிழக சட்டசபை தேர்தல் இன்று நடைபெற்றது.

சென்னை,

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 4 மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் சட்டசபை தேர்தல் தேதி கடந்த மாதம் (மார்ச்) 15-ந் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, கேரளா, அசாம், புதுச்சேரிக்கு கடந்த 9-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்திற்கு இன்று வாக்குப்பதிவு நடந்தது. இதில், 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் மேற்கு வங்காளத்திற்கு வரும் 29-ந் தேதியும் வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது.

இந்த நிலையில், சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்த கேரளா (140 தொகுதிகள்), அசாம் (126), புதுச்சேரி (30) தேர்தல்களில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமான வாக்குகள் பதிவாகின. கடந்த (2021) சட்டசபை தேர்தலின்போது, கேரளாவில் 74.57 சதவீதமும், அசாமில் 82.04 சதவீதமும், புதுச்சேரியில் 81.88 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தன. ஆனால், இந்தத் தேர்தலில் 3 மாநிலங்களிலும் வாக்கு சதவீதம் கடந்த முறையைவிட அதிகரித்து இருந்தது. அதாவது, கேரளாவில் 84.42 சதவீதமும், அசாமில் 84.42 சதவீதமும், புதுச்சேரியில் 91.23 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

அந்த வகையில், தமிழகத்தில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், முன் எப்போதும் இல்லாத வகையில் 85 சதவீத வாக்குகள் பதிவாகி 74 ஆண்டு கால சட்டசபை தேர்தல் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது. மேற்கு வங்காளத்தில் முதற்கட்டமாக 152 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவில் 91.78 சதவீதம் பதிவாகியுள்ளன.

பொதுவாக, தேர்தலின்போது வாக்கு சதவீதம் அதிகரித்தால், ஆளுங்கட்சி மீது கடும் அதிருப்தி அல்லது ஆளுங்கட்சிக்கு அதிக ஆதரவு என்ற நிலைப்பாட்டை மக்கள் எடுத்திருப்பதாக கூறுவார்கள்.

இது ஒரு வகையில் சரியாக இருக்கும் என எடுத்துக்கொண்டாலும், சமீபத்திலங் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியே (எஸ்.ஐ.ஆர்.) இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இந்தப் பணியின்போது, இறந்தவர்களின் பெயரில் இருந்த வாக்காளர் அட்டை நீக்கம் செய்யப்பட்டது. இதேபோல், இரட்டை பதிவும் கண்டுபிடித்து அகற்றப்பட்டது. இதன் காரணமாக, ஒவ்வொரு மாநிலத்திலும் லட்சக்கணக்கான தகுதியற்ற வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.

தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிக்கு முன்பு 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் இருந்தனர். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானபோது, அதில் 5 கோடியே 67 லட்சத்து 7 ஆயிரத்து 380 வாக்காளர்கள் இருந்தனர். அதாவது, 74 லட்சத்து 7 ஆயிரத்து 207 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.

தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்றுள்ள 16 சட்டசபை தேர்தல்களில், அதிகபட்சமாக 2011-ம் ஆண்டு 78.2 சதவீத வாக்குகளும், குறைந்த அளவாக 1957-ம் ஆண்டு 46.84 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்தன.

இந்தத் வரலாற்று சாதனையாக 85 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இதற்கு, எஸ்.ஐ.ஆர். பணிகள் ஒரு காரணமாக கூறப்பட்டாலும், முதல் தலைமுறை வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்ததும் மற்றொரு காரணமாக சொல்லப்படுகிறது.