தமிழக செய்திகள்

திமுகவில் இணைந்த காங்கிரஸ் இளைஞரணி மாநில முன்னாள் பொதுச்செயலாளர்

காங்கிரஸ் இளைஞரணி மாநில பொதுச்செயலாளராக செயல்பட்டவர் அலீம் அல் புகாரி.

சென்னை,

காங்கிரஸ் இளைஞரணி மாநில பொதுச்செயலாளராக செயல்பட்டவர் அலீம் அல் புகாரி. இவர் தமிழ், ஆங்கில தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் காங்கிரஸ் பிரதிநிதியாக பங்கேற்று அறியப்பட்டவர்.

இதனிடையே, சட்டசபை தேர்தலில் தவெக வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில் காங்கிரஸ் போன்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. அதேவேளை, தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்ததை விமர்சித்து காங்கிரஸ் இளைஞரணி மாநில பொதுச்செயலாளர் பதவியை கடந்த வியாழக்கிழமை அலீம் அல் புகாரி ராஜினாமா செய்தார். மேலும், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்தார்.

இந்நிலையில், காங்கிரசில் இருந்து விலகிய அலீம் அல் புகாரி இன்று திமுகவில் இணைந்தார். திமுக தலைமை அலுவலகத்திற்கு சென்ற அலீம் அல் புகாரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாநில முன்னாள் பொதுச் செயலாளர் அலீம் அல் புகாரி தி.மு.க.வில் இணைந்தார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இன்று (19.5.2026) காலை, அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாநில முன்னாள் பொதுச் செயலாளர் அலீம் அல் புகாரி தி.மு.கவில் இணைந்தார்.

அப்போது சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ, திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யமொழி, தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.