தமிழக செய்திகள்

முதல்-அமைச்சர் விஜயுடன் லண்டன் செல்லாதது ஏன்..? - அமைச்சர் கீர்த்தனா விளக்கம்

ஒருவரின் உடல்நலம் என்பது தனிப்பட்ட விஷயம் என்று அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

சென்னை,

சிகிச்சை காரணமாகத்தான் முதல்-அமைச்சர் விஜயுடன் லண்டன் செல்லவில்லை என்று அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

முதலீடுகள் ஈர்ப்பு

தமிழக முதல் அமைச்சர் விஜய், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 6 நாட்கள் அரசு முறைப் பயணமாக கடந்த 10-ந்தேதி லண்டன் புறப்பட்டு சென்றார். தொடர்ந்து 12-ந்தேதி முதல்-அமைச்சர் விஜய், தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைப்பதற்காக, உலகப்புகழ் பெற்ற சில்வர்ஸ்டோன் பந்தய களத்தில் உள்ள உள்கட்டமைப்பு, பந்தய சுற்றுப்பாதை, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போட்டிகளை வணிக ரீதியாக நடத்தும் முறைகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டார். பின்னர் அங்கு நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக 2 நாட்கள் முதல்-அமைச்சர் விஜய், பல்வேறு தொழில் அதிபர்களை சந்தித்து தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்த்தார். முதல்-அமைச்சரின் லண்டனத்தில் சுமார் ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேலான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாகவும், அதன் மூலம் தமிழகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் எனவும் தமிழக அரசு அறிவித்தது.

அறுவை சிகிச்சை

இதனிடையே தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான பயணத்தில் தமிழகத்தின் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா ஏன் முதல்-அமைச்சருடன் செல்லவில்லை? என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.

இந்த சூழலில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா லண்டன் செல்லாதது ஏன்? என்பது குறித்து கவுண்டம்பாளையம் த.வெ.க. எம்.எல்.ஏ. கனிமொழி தனது சமூக வலைத்தள பதிவில், “தொழில்துறை அமைச்சராக உள்ள கீர்த்தனாவுக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக சில வருடங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை மூலமாக 'பிளேட்' (எலும்புகளை இணைக்க பொருத்தப்படும் இரும்பு தகடு) பொருத்தப்பட்டிருந்தது. இது அவருக்கு சமீப காலங்களாக சிக்கலை ஏற்படுத்தியது.

இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கடந்த 7-ந்தேதி பரிசோதனைக்காக சென்றார். அப்போது அவருடைய உடல்நிலையை பரிசோதித்த டாக்டர்கள் 'பிளேட்'டை விரைவாக அகற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினர். இதன்படி கடந்த 10-ந்தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் கீர்த்தனா, அறுவை சிகிச்சை முடிந்து 2 நாட்களுக்கு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் முதல்-அமைச்சர் விஜயுடன் லண்டன் செல்லாதது ஏன்..? என்பது குறித்து தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிகிச்சை காரணமாகத்தான் முதல்-அமைச்சர் விஜயுடன் லண்டன் செல்லவில்லை. நான் பங்கேற்காததற்கு வேறு எந்த காரணமும் இல்லை. ஏற்கனவே ஏற்பட்ட காயத்துக்காக பொருத்தியிருந்த இம்ப்ளாண்ட் (உடலுக்குள் பொருத்தப்பட்ட சாதனம்) வலியால் செப்டம்பர் முதல் வாரத்தில் அசௌகரியம் ஏற்பட்டது.

மருத்துவ ஆலோசனையைப் பெற்ற பிறகு, அந்த 'இம்ப்ளான்ட்' சிக்கல்களை ஏற்படுத்த தொடங்கியிருந்ததால் அதை அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது. முதலில் இச்சிகிச்சையை முன்னதாகவே மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தாலும், செப்டம்பர் 9-ஆம் தேதி 'HD Hyundai' குழுவினருடன் திட்டமிடப்பட்டிருந்த முக்கியமான சந்திப்பை முதலில் முடித்துவிடவே விரும்பினேன்.

அதன்படி செப்டம்பர் 10-ஆம் தேதி சிகிச்சையை மேற்கொண்ட பின் போதுமான ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. ஒருவரின் உடல்நலம் என்பது தனிப்பட்ட விஷயம் என்றும், தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய ஊகங்களுக்குப் பதிலாக அரசின் செயல்பாடுகள், முடிவுகள் மற்றும் அவற்றின் விளைவுகள் குறித்தே பொது விவாதங்கள் அமைய வேண்டும் என்று நான் கருதுகிறேன். இத்தகவலை முன்னதாக வெளியிட வேண்டாம் என்று முடிவு செய்திருந்தேன் .

நான் வராததற்கு வேறு எந்தக் காரணமும் இல்லை. எனது வருகையின்மை இவ்வளவு பெரிய விவாதப் பொருளாக மாறும் என்பதையோ, அல்லது துறை சார்ந்த பணிகளை விடத் தான் ஏன் லண்டனில் இல்லை என்பது குறித்த விவகாரத்திற்கே அதிக கவனம் செலுத்தப்படும் என்பதையோ முன்பே அறிந்திருந்தால், அது குறித்து அப்போதே தெளிவுபடுத்தியிருப்பேன்.

மருத்துவமனையிலும் பின்னர் வீட்டிலும் உடல்நலம் தேறிக்கொண்டிருந்த காலத்திலும்கூட, முதல்-அமைச்சரின் லண்டன் பயணம் தொடர்பான ஏற்பாடுகள் மற்றும் முதலீடு சார்ந்த நடவடிக்கைகளை தொடர்ந்து ஒருங்கிணைத்து வந்தேன். மருத்துவச் சிகிச்சைக்குப் பிறகு நான்கு நாட்களிலேயே நான் மீண்டும் பணிக்குத் திரும்பினேன்” என்று அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT