தமிழக செய்திகள்

ராமேஸ்வரம்: கேரள வாகன ஓட்டியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டிராபிக் போலீசார் - வைரல் வீடியோ

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ராமேஸ்வரம்,

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இந்நிலையில், ராமேஸ்வரத்திற்கு வந்த கேரள வாகன ஓட்டியிடம் டிராபிக் போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ

கேரளாவை சேர்ந்த நபர் காரில் ராமேஸ்வரத்திற்கு வந்துள்ளார். ராமேஸ்வரம் - தனுஷ்கோடி சாலையில் அரசு பஸ்சுக்கு பின்னே அந்த கேரள நபர் தனது காரை ஓட்டி சென்றுள்ளார். அப்போது, அவரது காரை இடைமறித்த டிராபிக் போலீசார், இது வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதி ( திஸ் இஸ் நோ எண்ட்ரி) என்று கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த கேரள வாகன ஓட்டி முன்னால் சென்ற அரசு பஸ்சை காட்டி, இவ்வளவு பெரிய பஸ் முன்னே செல்கிறது இது நோ எண்ட்ரி பகுதியா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த போக்குவரத்து போலீஸ், அது அரசு பஸ்.. என்று கூறினார். அப்போது, அரசு பஸ்சுக்கு ஒரு சட்டம், மற்றவர்களுக்கு ஒரு சட்டமா? என கேள்வி எழுப்பினார். அப்போது, பைக்கில் ஹெல்மெட் அணியாமல் வந்த மற்றொரு டிராபிக் போலீஸ் அதிகாரி, அந்த கேரள நபரின் கார் எண்ணை தனது செல்போனில் புகைப்படம் எடுத்தார். பின்னர், அந்த வாகன ஓட்டியிடம் டிராபிக் போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவங்கள் அனைத்தையும் கேரள வாகன ஓட்டி தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.