சென்னை,
வரும் நவம்பர் 1-ந் தேதி நடைபெற உள்ள டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று (21.10.2026) வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் குரூப்-2, 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் 11-ந் தேதி அன்று வெளியிடப்பட்டது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் கடந்த செப்டம்பர் 9-ந் தேதி வரை பெறப்பட்டது.
தொடர்ந்து காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, 846-ஆக உயர்த்தப்பட்டது. அதன்படி, தற்போது குரூப் 1 பதவிகளில் 43 காலிப்பணியிடங்களும், குரூப் 2 பதவிகளில் 803 காலிப்பணியிடங்களும் நிரப்பப்படுகிறது. இத்தேர்வு முதல்நிலை, முதன்மை என இரண்டு கட்டமாக நடைபெறும் நிலையில், முதற்கட்டமாக முதல்நிலை தேர்வு வரும் நவம்பர் 1-ந் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று (புதன்கிழமை) வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 07/2026, நாள் 11.08.2026 மற்றும் பிற்சேர்க்கை எண் 7A/2026 நாள் 03.09.2026-ன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி-II மற்றும் IIA பணிகள்) பதவிகளுக்கான முதல்நிலை (கொள்குறி வகை) (ஒளிக்குறி உணரி) தேர்வு 01.11.2026 முற்பகல் நடைபெற உள்ளது.
தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு (Hall Ticket) தேர்வாணையத்தின் இணைய தளம் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவு (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹால் டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை தேர்வர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும், தேர்வர் விவரம், தேதி, நேரம், தேர்வு நடைபெறும் மையம், முகவரி உள்ளிட்டவை ஹால் டிக்கெட்டில் இடம்பெற்றிருக்கும் என்றும் தேர்வர்கள் அனுமதிக்கப்பட்ட உபகரணங்களை தவிர்த்து, வேறு எந்த பொருளையும் தேர்வறைக்கு எடுத்து செல்லக்கூடாது என்றும் தேர்வாணையம் அறிவுறுத்தி உள்ளது.