சென்னை,
குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வருவாய் உதவியாளர், வரித்தண்டலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் உள்ள 6,574 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த அக்டோபர் 6-ம்தேதி வெளியிட்டது.
இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு அன்றைய தினமே தொடங்கியது. இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி என்றாலும், பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளும் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.
நேற்றைய நிலவரப்படி குரூப்-4 தேர்வுக்கு 9.80 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நவம்பர் 5-ம்தேதி என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அனைத்து பிரிவினருக்கும் வயது உச்ச வரம்பு 5 ஆண்டு காலம் உயர்த்தி ஆணை வழங்கப்பட்டுள்ள நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 8-ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் டிஎன்பிஎஸ்சி இணையதளமான www.tnpsc.gov.in என்ற முகவரியில் நவம்பர் 8-ம்தேதி நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம். குரூப்-4 தேர்வுக்கான எழுத்துத் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 10-ம்தேதி நடைபெற உள்ளது.