சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தலைமையில் பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன் முன்னிலையில், போதை இல்லா தமிழ்நாட்டை உருவாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக பள்ளிக்கல்வித் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டிய செயல்திட்டங்கள் குறித்து இன்று 27.05.2026 தலைமைச் செயலகத்தில், தொடர்புடைய அரசுத் துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்ததாவது.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் பொறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கென பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை தீட்டி வருகிறார்கள். குறிப்பாக முதல்-அமைச்சர் காவல் துறை மூலம் போதைப் பொருட்களை தடுக்கும் வகையில் சிறப்பு கண்காணிப்பு பிரிவின் வாயிலாக கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்கி இளைய தலைமுறையினரை சாதனையாளர்களாக திகழ செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில் இன்றய தினம் பள்ளிக் கல்வித் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை இணைந்து குழந்தைகளுக்கு, பள்ளி பயிலும் காலங்களிலேயே கல்விக்கு நிகராக விளையாட்டிற்கும் முக்கிய துவம் அளித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது சூழ்நிலையில் பள்ளி, கல்லூரி பயிலும் மாணாக்கர்களின் உடல் நலமும், மன நலமும் நன்றாக இருக்கும் சூழ்நிலையில் தான் அவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி சிறந்த மதிப்பெண்களை பெற முடியும் என்பதால் தற்பொழுது அறிவியல் பூர்வமான கல்வி முறையை வழங்கிட செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது.
இதற்கென முதற்கட்டமாக விளையாட்டு அறிவியலை பள்ளி மாணவர்களுக்கு வழங்கிடும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் உள்ள உடற்கல்வி ஆசிரியர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துடன் ஒருங்கிணைந்து பணியாற்றிடவும், தங்கள் பள்ளிகளில் பல்வேறு பிரிவுகளில், குறிப்பாக மீனவர்களின் குழந்தைகள் இயல்பாகவே நீச்சல் பயிற்சியில் சிறந்தவர்களாகவும், விவசாயிகள் உள்ளிட்ட உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்களின் குழந்தைகள் நெடுந்தூர தடகள போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்கும் வகையிலான உடல்திறன் உடையவர்களாக இருப்பார்கள். இத்தகைய மாணாக்கர்களை கண்டறிந்து, அவர்களை தேசிய மற்றும் உலக அளவிலான போட்டிகளில் பங்கேற்று சாதனைகள் புரியும் வகையில் அவர்களுக்கு விளையாட்டு அறிவியல் அடிப்படையிலான பயிற்சிகளை அளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விளையாட்டு துறையில் தேசிய மற்றும் உலக அளவிலான போட்டிகளில் பங்கேற்றாலோ அல்லது வெற்றியடைந்தாலோ அதற்கேற்ப அரசுத் துறையில் 3 சதவீத விளையாட்டு இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு மற்றும் பொது துறையில் வேலைவாய்ப்புகளை பெற முடியும். இவ்வாறு விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்தார்கள்.
பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் தெரிவித்ததாவது.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் இளைய தலைமுறையினரின் முன்னேற்றத்திற்கு தனி கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், அரசு அலுவலர்கள் என அனைவரையும் ஒருங்கினைந்து பள்ளி மாணாக்கர்களை உடல் அளவிலும் மனது அளவிலும் தன்னம்பிக்கை உடையவர்களாகவும், வலிமை உடையவர்களாகவும் திகழ செய்ய அரியிவில் பூர்வமான கல்வியை விளையாட்டு மேம்பாட்டுத் துறையுடன் இணைந்து செயல்படுத்த இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளது.
நம் எதிர்கால தூண்களாகிய பள்ளி மாணாக்கர்களுக்கு சிறந்த கல்வியை வழங்கி அதன் மூலம் சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு மகத்தானது. குறிப்பாக இனிவரும் காலங்களில் மாணாக்கர்களுக்கு கல்விக்கு நிகராக விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள படுகிறது. இவ்வாறு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் தெரிவித்தார்கள்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ச. விஜயகுமார், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை (ம) சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், பள்ளிக் கல்வித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தரமோகன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு செயலாளர் சஜ்ஜன்சிங் ரா சவான், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.