தமிழக செய்திகள்

‘படித்த இளைஞர்களின் கனவுகளை நனவாக்க ஓராண்டில் 1.5 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்’ - அன்புமணி ராமதாஸ்

த.வெ.க., இதுவரை ஒரு புதிய ஆள்தேர்வு அறிவிக்கையைக் கூட வெளியிடாதது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என அன்புமணி ராததாஸ் விமர்சித்துள்ளார்.

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“கர்நாடக அரசுத் துறைகளில் காலியாக உள்ள 72,186 பணியிடங்களை 6 மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும் என்று அம்மாநில முதல்-அமைச்சர் ஆணையிட்டிருப்பதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் போர்க்கால வேகத்தில் ஆள்தேர்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் அனைத்து காலி இடங்களும் நிரப்பப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த த.வெ.க., இன்று வரை ஒரே ஒரு புதிய ஆள்தேர்வு அறிவிக்கையைக் கூட வெளியிடாதது இளைஞர்களிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகத்தில் அரசுத் துறைகளில் காலியிடங்கள் அதிகரித்து வந்ததைத் தொடர்ந்து பல்வேறு துறைகளில் மொத்தம் 72,186 பணியிடங்களை அடுத்த 6 மாதங்களில் நிரப்ப வேண்டும் என்று அம்மாநில முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆணையிட்டுள்ளார். அதற்கான நிதித்துறை ஒப்புதல் சில நாள்களுக்கு முன் வழங்கப்பட்ட நிலையில், 15 ஆள்தேர்வு அறிவிக்கைகள் கடந்த சில நாள்களில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளன. இதனால் அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருந்த கர்நாடக இளைஞர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அதேபோன்ற மகிழ்ச்சி தங்களுக்கு எப்போது கிடைக்கும்? என்பது தான் தமிழக இளைஞர்களின் வினாவாக உள்ளது.

இந்தியாவில் அரசுத்துறைகளில் அதிக காலி பணியிடங்களைக் கொண்டுள்ள மாநிலங்களில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தரவுகளை தமிழகத்தை அடுத்தடுத்து ஆட்சி செய்த எந்த அரசும் வெளியிடாத நிலையில், அரசுத்துறை, பொதுத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் ஆகிய 3 பிரிவுகளிலும் சேர்த்து குறைந்தபட்சம் 6 லட்சம் பணியிடங்கள் காலியாக இருக்கும் என்று அரசு பணியாளர் அமைப்புகள் தெரிவித்திருக்கின்றன. இதற்கு காரணம் அரசு பணிகளுக்கு ஆள்தேர்வு நடத்தப்படாதது தான்.

2021&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள மூன்றரை லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்; 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும்; அதன் மூலம் ஐந்தரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், 5 ஆண்டுகளில் 50 ஆயிரத்திற்கும் குறைவானவர்களுக்கு மட்டும் தான் நிரந்தர அரசுப் பணிகள் வழங்கப்பட்டன. உறுதியளிக்கப்பட்ட 2 லட்சம் புதிய பணியிடங்களில் ஒரே ஒரு பணியிடம் கூட ஏற்படுத்தப்படவில்லை. அதுமட்டுமின்றி, ஐந்தாண்டுகளில் ஒன்றரை முதல் 2 லட்சம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற நிலையில், அதனால் ஏற்பட்ட காலியிடங்களும் கூட முழுமையாக நிரப்பப்படவில்லை. அதன் விளைவு தான் அரசுத் துறைகளில் காலியிடங்களின் எண்ணிக்கை இந்த அளவுக்கு அதிகரித்துள்ளது.

தி.மு.க. ஆட்சியில் உறுதியளிக்கப்பட்டவாறு அரசு வேலைகள் வழங்கப்படாததால், திமுக அரசுக்கு எதிராக இளைஞர்களிடம் மிகப்பெரிய கொந்தளிப்பு நிலவியது. அதைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்குடன், தவெக ஆட்சிக்கு வந்தால், அரசுத் துறைகளில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களும் விரைந்து நிரப்பப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி (எண்: பொருள்/4/ஏ/3) அளிக்கப்பட்டிருந்தது. அதை நம்பி இளைஞர்கள் வாக்களித்த நிலையில், அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய கடமை த.வெ.க. அரசுக்கு உண்டு.

ஆனால், த.வெ.க. ஆட்சிக்கு வந்த இரண்டரை மாதங்களில் அரசுத்துறை காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக ஒரே ஒரு புதிய ஆள்தேர்வு அறிவிக்கை கூட வெளியிடப்படவில்லை. டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு வெளியிட்ட 2026-க்கான ஆண்டு திட்டத்தின்படி, பட்டப்படிப்பை தகுதியாகக் கொண்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் - 461 இடங்கள், பட்டயப்படிப்பை தகுதியாகக் கொண்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் - 839 இடங்கள், தொகுதி 1 பணிகள் - 26 என 1326 பணியிடங்களுக்கு மட்டும் தான் மூன்று ஆள்தேர்வு அறிவிக்கைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

தமிழக அரசுத் துறைகளில் இன்றைய நிலையில் 6 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக வைத்துக் கொண்டால், அடுத்த ஐந்தாண்டுகளில் குறைந்தது 2 லட்சம் பணியிடங்கள் காலியாகக் கூடும். அவற்றையும் சேர்த்தால் புதிய அரசு ஐந்தாண்டுகளில் 8 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்க வேண்டியிருக்கும். தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து 31.38 லட்சம் பேரும், பதிவு செய்யாமல் ஒரு கோடி பேரும் அரசு வேலைக்காக காத்திருக்கும் நிலையில், இது தவிர்க்க முடியாதது ஆகும். அதன்படி பார்த்தால் ஆண்டுக்கு சராசரியாக ஒன்றரை லட்சம் பேருக்கு அரசு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட வேண்டியிருக்கும்.

இதைக் கருத்தில் கொண்டு, அடுத்த ஓராண்டில் 1.50 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அதற்கான அறிவிப்பை வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ள 2026-27ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு வெளியிட வேண்டும்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.