சென்னை,
ஐரோப்பிய ஒன்றியத்தின் வானிலை மையம் (European Union's Weather Centre) வெளியிட்டுள்ள புதிய கணிப்பின்படி, தமிழகத்தில் இன்று நிலவப் போகும் வெப்பத்தின் தன்மை குறித்து பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தின் யுடிசிஐ (Universal Thermal Climate Index - UTCI) அளவீடானது 32 புள்ளிகளைத் (டிகிரி செல்சியஸ்) தாண்டிவிட்டாலே, அதாவது 89.6 டிகிரி பாரன்ஹீட் அளவை தாண்டிவிட்டாலே பொதுமக்கள் அனைவரும் கடுமையான உடல் உழைப்பு மற்றும் கடினமான வேலைகள் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒருவேளை இந்த UTCI அளவீடு 38 டிகிரி செல்சியஸை, அதாவது 100.4 டிகிரி பாரன்ஹீட்டை கடந்துவிட்டால், அது மனித உடலுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் "கொடும் வெப்பத் தன்மை" (Extreme Heat Stress) எனக் கருதப்படும். இத்தகைய சூழலில், உடலில் நீரிழப்பு ஏற்பட்டு வெப்ப வாதம் (Heat Stroke), மாரடைப்பு போன்ற உயிருக்கே ஆபத்தான கொடிய விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் தேவையின்றி வெயிலில் வேலை செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
மேலும் அதிக நேரம் வெளியில் செல்வதைக் குறைத்துக் கொண்டு, போதிய அளவு நீர்ச்சத்து ஆகாரங்களை அருந்தி, உடலுக்கு அதிக நேரம் ஓய்வு கொடுக்க வேண்டும் என்றும் வானிலை மற்றும் சுகாதார அமைப்புகள் எச்சரித்துள்ளன.