வேலூர்,
வேலூரில் பனிமூட்டத்தால் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்கும் வகையில் வாகன ஓட்டிகளுக்கு தேநீர் வழங்கியும் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரித்தும் சுங்கச்சாவடி ஊழியர்கள் நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வேலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை முதல் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. குறிப்பாக, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்குப் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
அதிகாலை நேரங்களில் நீண்ட தூரம் பயணிக்கும் ஓட்டுநர்களின் தூக்கக் கலக்கத்தை போக்கவும், பனிமூட்டத்தால் ஏற்படும் சாலை விபத்துகளைத் தடுக்கவும் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர். சுங்கச்சாவடியைக் கடந்து சென்ற லாரி, கார் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக சூடான தேநீர் வழங்கப்பட்டது.
மேலும், சுங்கச்சாவடி ஊழியர்கள் ஒலிபெருக்கி மூலம், "பனி ரொம்ப அதிகமாக இருக்கிறது, வண்டியைப் பார்த்து மெதுவாக ஓட்டுங்கள்" என தொடர்ந்து அறிவுறுத்தினர். வாகனங்களின் முகப்பு விளக்குகளை (ஹெட்லைட்) ஒளிரவிட்டபடியும், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றியும் பாதுகாப்பாகப் பயணிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
விபத்துகளைத் தவிர்க்கும் நோக்கில் சுங்கச்சாவடி ஊழியர்கள் மேற்கொண்ட இந்த மனிதநேயச் செயல், நெடுஞ்சாலையில் பயணித்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.