தமிழகத்தில் உள்ள சுமார் 60 தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளுக்கான திருத்தப்பட்ட சுங்கக்கட்டண உயர்வு சட்டசபை தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இதனால் முக்கிய நகரங்களுக்கு இடையேயான சாலைப்பயணச்செலவு அதிகரிக்க உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் பெரும்பாலானவை சென்னையின் புறநகர் பகுதிகள் மற்றும் முக்கிய வழித்தடங்களில் அமைந்துள்ளன.
இதில் திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளும், தாம்பரம் புறவழிச்சாலையில் உள்ள வானகரம் சுங்கச்சாவடியும் அடங்கும். இதுதவிர சென்னை புறவழிச்சாலை வழித்தடத்தில் உள்ள சூரப்பட்டு மற்றும் நல்லூர், சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் உள்ள பட்டறைபெரும்புதூர் மற்றும் தெற்குப்பகுதியில் உள்ள சமயபுரம், கப்பலூர் மற்றும் நாங்குநேரி ஆகிய முக்கிய சுங்கச்சாவடிகளிலும் இந்த கட்டண மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் கார்களுக்கான கட்டணம் மாற்றம் இன்றி ரூ.75 ஆக தொடர்கிறது. ஆனால் பெரிய வாகனப்பிரிவுகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டு உள்ளன. சுங்க கட்டணத்தில் மாதாந்திர பாஸ் வாங்கும் இலகுரக வணிக வாகனங்களுக்கு ரூ.5-மும், லாரிகளுக்கு ரூ.10-மும் உயர்த்தப்பட்டு உள்ளது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறினர்.