தமிழக செய்திகள்

வரத்து குறைவால் தக்காளி விலை தொடர்ந்து அதிகரிப்பு..!

தக்காளியின் வரத்து தொடர்ந்து குறைந்து வருவதால், கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி, குப்பம், விகோட்டா மற்றும் கர்நாடக மாநிலம் ஒட்டுப்பள்ளி, கேர்லார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

35 லாரிகளாக குறைந்த வரத்து

வழக்கமாக தினசரி சுமார் 55 லாரிகள் வரை தக்காளி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்து கொண்டிருந்தன. ஆனால், கடந்த சில நாட்களாக தக்காளியின் வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது. இதன் காரணமாக அதன் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், இன்று கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 35 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்தது. வரத்து குறைந்ததால் தக்காளி விலை உயர்ந்துள்ளது.

கிலோ ரூ.60-க்கு விற்பனை

கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில், வெளி மார்க்கெட்டுகளில் உள்ள காய்கறி கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் விலை உயர வாய்ப்பு

வறட்சி காரணமாக தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டு வருவதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வரும் நாட்களில் தக்காளி வரத்து மேலும் குறையும் பட்சத்தில் அதன் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

பெரிய வெங்காயம் விலையும் உயர்வு

இதேபோல், பெரிய வெங்காயத்தின் விலையும் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் ரகத்தை பொறுத்து ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. வெளி மார்க்கெட்டுகளில் உள்ள காய்கறி கடைகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.80 வரை விற்பனை ஆகிறது.

இல்லத்தரசிகள் கவலை

சமையலுக்கு அன்றாடம் பயன்படுத்தப்படும் தக்காளி மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர். காய்கறிகளின் வரத்து மற்றும் விலையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT