திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் குமரலிங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் கிணற்று பாசனத்தை ஆதாரமாக கொண்டு விவசாயிகள் தக்காளியை சாகுபடி செய்து உள்ளனர். தற்போது தக்காளி அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் தக்காளிகள் உடுமலை, ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால், போதிய தண்ணீர் இல்லாதது மற்றும் மரபணு பிரச்சினையால் தக்காளிகள் தரம் இல்லாமல் காணப்படுகிறது. இதனால் தக்காளிகள் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து உள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மடத்துக்குளம் தாலுகா பகுதியில் பருவமழை பொய்த்ததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, கிணறுகளில் போதிய நீர் இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் தக்காளி செடிகளுக்கு தேவையான தண்ணீர் பாய்ச்ச முடிவதில்லை. இதுமட்டுமின்றி, சந்தை யில் கிடைக்கும் சில விதைகளில் ஊக்கமில்லாத தன்மை மற்றும் மரபணு பிரச்சினைகள் போன்ற காரணங்களால், தக்காளிப் பழங்கள் போதிய வளர்ச்சியின்றி சிறிய அளவிலேயே காணப்படுகின்றன.
மார்க்கெட்டுக்கு வரும் தக்காளிகளில் இந்த வறட்சி மற்றும் தரப் பிரச்சினைகளையும் தாண்டி, நோய் தாக்கமில்லாமல் திரட்சியாக இருக்கும் உயர்ரக தக்காளிகள் மட்டுமே தனியாக பிரிக்கப்படுகின்றன. இந்த தக்காளிகள் நீண்ட தூரப் போக்குவரத்தை தாங்கும் என்பதால், கேரளம் உள்ளிட்ட வெளிமாநில வியாபாரிகள் இவற்றை அதிகபட்ச விலையாக ஒரு கிலோ ரூ.22 என நிர்ணயம் செய்து போட்டி போட்டு ஏலம் எடுத்துச் செல்கின்றனர்.
அதேநேரம், போதிய தண்ணீர் இல்லாமை மற்றும் விதை குறைபாடுகளால் வளர்ச்சியற்ற நடுத்தர மற்றும் சாதாரண ரக தக்காளிகள் சந்தையில் கடுமையான விலை சரிவை சந்தித்துள்ளன. இந்த சாதாரண ரகங்கள் கிலோ ரூ.13 என்ற அடிமாட்டு விலைக்கு கேட்கப்படுகிறது. இதனால் அரும்பாடுபட்டு தக்காளி சாகுபடி செய்த விவசாயிகளை இது அதிர்ச்சி அடையச்செய்து உள்ளது. தண்ணீர் பற்றாக்குறை, தரமற்ற விதைகள் உள்ளிட்ட இன்னல்களுக்கு இடையே அதிக செலவு செய்து, தக்காளி சாகுபடி செய்துள்ளோம். ஆனால், தற்போது தக்காளிக்கு கட்டுப்படியாகாத விலை உள்ளதால், போட்ட முதலீட்டைக்கூட எடுக்க முடியாமல் தவிக்கிறோம் என்று வேதனையுடன் கூறினர்.