தமிழக செய்திகள்

“நாளை நமதே... தமிழ்நாடும் நமதே...!": பாஜக தமிழகமெங்கும் 20,000 தெரு முனைப் பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள்

தமிழகமெங்கும் கட்சியின் மூத்த தலைவர்கள், தெருமுனைப் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்கள்.

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை தமிழகத்தின் அனைத்து நகரங்கள் மற்றும் கிராமப்பகுதிகளில் மக்களைச் சந்திக்கும் தெருமுனைப் பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள் நடத்திட, பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக ஆட்சியில் மக்கள் பட்ட துன்பங்களை, திறனற்ற திமுக ஆட்சியின் அவலங்களை, மக்களிடம் எடுத்துச் சொல்லும் தெருமுனைப் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களின் மாநிலத்தலைவர் நிகழ்ச்சியாக, நயினார் நாகேந்திரன் மத்திய சென்னை கிழக்கு மாவட்டத்திலும், சென்னை மத்திய மேற்கு கே.அண்ணாமலை தொடக்க அமைச்சர் மாவட்டத்திலும், எல்.முருகன் முன்னாள் மாநிலத் தலைவர் கரூரிலும், முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தென்சென்னையிலும், தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் வடசென்னை கிழக்கிலும் பங்கேற்று, தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்கள்.

மேலும், திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, விழுப்புரம், கன்னியாகுமரி, வேலூர், உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், கட்சியின் மூத்த தலைவர்கள், தெருமுனைப் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்கள்.

கொடுத்த வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றாமல், மக்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணாமல், தமிழகத்தை தொடர்ந்து ஊழல்களாலும், கனிமவளக் கொள்ளைகளாலும், சட்டம் ஒழுங்குச் சீர்கேட்டாலும், நிர்வாகத் திறமையின்மையாலும், தொடர்ந்து வஞ்சிக்கும் திமுக ஆட்சியை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் தெருமுனைப் பிரசாரப் பொதுக்கூட்டங்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றியை மேலும் உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடெங்கும் 20,000த்திற்கும் மேற்பட்ட பகுதிகளில், “நாளை நமதே... தமிழ்நாடும் நமதே !" என்ற வெற்றி முழக்கத்துடன், தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற இருக்கிறது. இதில் திரளாகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த துணை நிற்குமாறு பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி தலைவர்கள் என அனைவரையும் அன்புடன் வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.