சென்னை,
பி.இ., பி.டெக். போன்ற என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பப்பதிவு செய்யப்பட்டு, அதன் வாயிலாகவே கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் நடப்பு கல்வியாண்டுக்கு என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த ஜூலை மாதம் 26-ந்தேதி தொடங்கியது.
தமிழகம் முழுவதும் உள்ள 450-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்களில் சேருவதற்கு மாணவ-மாணவிகள் விண்ணப்பப்பதிவு தொடங்கியதில் இருந்து ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். சுயவிவரங்கள் பதிவு, விண்ணப்பக் கட்டணம் செலுத்துவது, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வது போன்ற நடைமுறையின் அடிப்படையில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கான முழுப்பணிகளும் நிறைவு பெறுகின்றன.
அதன்படி, நேற்று மாலை நேர தகவல்படி, ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 656 பேர் விண்ணப்பப்பதிவு செய்து இருக்கின்றனர். இதில் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 971 பேர் விண்ணப்பக்கட்டணம் செலுத்தி இருப்பதாகவும், இவர்களில் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 15 பேர் சான்றிதழ்களை பூர்த்தி செய்து விண்ணப்பப்பதிவுக்கான முழு பணிகளையும் நிறைவு செய்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப்பதிவு செய்வதற்கு நாளை (செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் ஆகும்.
கடந்த ஆண்டில் கிட்டதட்ட 1 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 406 பேர் தகுதியுடையவர்களாக கருதப்பட்டனர். இந்த ஆண்டும் அதேபோல் 1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருக்கின்றனர். இதில் எவ்வளவு பேர் தகுதியானவர்கள் என்பது தரவரிசைப்பட்டியல் வெளியாகும்போது தெரிந்துவிடும். இதன்படி, முதற்கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 7-ந்தேதி தொடங்கி, அக்டோபர் 4-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.