தமிழக செய்திகள்

உடன்பிறப்பின் குரல் இணையத்தளத்தில் கருத்தைப் பதிவு செய்ய நாளை கடைசி நாள்: மு.க.ஸ்டாலின்

உடன்பிறப்பின் குரல் இணையத்தளத்தில் இதுவரை 4.60 லட்சம் கருத்துகளை பெற்றுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

உடன்பிறப்பின் குரல் (udanpirapinkural.in) இணையத்தளத்தில் இதுவரை 4.60 லட்சம் கருத்துகளைப் பெற்றுள்ளோம். இந்த இணையத்தளத்தின் முக்கிய நோக்கமே உடன்பிறப்புகள் அனைவரும் எவ்விதத் தயக்கமுமின்றி உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டும் என்பதுதான். உங்கள் கருத்துகள் நேரடியாக எனக்கே வந்து சேரும்.

இந்த இணையத்தளத்தில் உடன்பிறப்புகள் மட்டுமல்லாமல், கழக நிர்வாகிகள், கழக அனுதாபிகள், பொதுமக்கள் என அனைவரும் அளிக்கும் ஆலோசனைகளை ஆராய்ந்து நம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை நான் திட்டமிடுவேன். எனவே (நாளை) 31-ம் தேதிக்குள் உங்கள் கருத்துகளை உடன்பிறப்பின் குரல் இணையத்தளத்தில் பதிவு செய்யவும்.

கழக மாநிலப் பொறுப்பாளர்களும், கழக மாவட்டச் செயலாளர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், மற்ற முக்கியப் பொறுப்பாளர்கள் அனைவரும் மறக்காமல், இந்தச் செய்தி அனைத்து உடன்பிறப்புகளுக்கும் சென்றடையும் வண்ணம் உங்களுடைய சமூக வலைத்தளப் பக்கங்களிலும் வாட்ஸ்-அப் குழுக்களிலும் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.