தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் துவரம் பருப்பை, முந்தைய காலங்களைக் காட்டிலும் குறைந்த விலையில் கொள்முதல் செய்ததன் மூலம் தவெக அரசு ரூ.187 கோடியை மிச்சப்படுத்தியுள்ளதாக குடிமைப் பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம் அரிசி, சர்க்கரை, கோதுமையுடன் துவரம் பருப்பும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு துவரம் பருப்பை கொள்முதல் செய்து நியாயவிலைக் கடைகளுக்கு வழங்கி வருகிறது.
இதுகுறித்து குடிமைப் பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 3 மாதங்களில் துவரம் பருப்பை குறைந்த விலையில் கொள்முதல் செய்ததன் மூலம் ரூ.187 கோடி அளவுக்கு செலவினம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த திமுக ஆட்சியில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.109.15-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், தவெக ஆட்சியில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.77.89-க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் முந்தைய கொள்முதல் விலையைவிட ஒரு கிலோவுக்கு ரூ.31 குறைவாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இதனால், கடந்த 3 மாதங்களில் துவரம் பருப்பு கொள்முதலுக்கான செலவில் ரூ.187 கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் துவரம் பருப்பு கொள்முதலுக்காக திமுக ஆட்சியில் ரூ.654 கோடி செலவிடப்பட்டது. ஆனால், தவெக ஆட்சியில் ரூ.467 கோடி மட்டுமே செலவிடப்பட்டு, ரூ.187 கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நியாயவிலைக் கடைகளுக்கு வழங்குவதற்காக 60 ஆயிரம் டன் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் விலை குறைக்கப்பட்டாலும், துவரம் பருப்பின் தரத்தில் எந்தவிதக் குறைபாடும் இல்லை என்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை தெளிவுபடுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.