தேனி,
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள புகழ்பெற்ற கும்பக்கரை அருவியில் இன்று சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அதிரடி தடை விதித்துள்ளனர்.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி மற்றும் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, தேனி மாவட்டம் கும்பக்கரை அருவிக்கு வரும் நீர்வரத்து திடீரென அதிகரித்து, வெள்ளம் சீறிப்பாய்ந்து வருகிறது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தேனி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் 'ஆரஞ்சு எச்சரிக்கை' விடுத்துள்ளது. இதனால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பைக் கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரபலமான கும்பக்கரை அருவிப் பகுதிக்கு செல்ல இன்று (வெள்ளிக்கிழமை) வனத்துறை முற்றிலும் தடை விதித்துள்ளது.
அருவியில் நீர்வரத்து சீராகி, இயல்பு நிலை திரும்பிய பின்னரே சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்படும் என வனச்சரக அலுவலர் தெரிவித்துள்ளார். அதுவரை பொதுமக்கள் அருவிப் பகுதிக்கும், கொட்டகுடி ஆற்றுப் படுகைகளுக்கும் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.