நெல்லை
திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 323 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நீர்மட்டம் அரை அடி உயர்ந்து 75½ அடியை எட்டியுள்ளது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கும் வினாடிக்கு 358 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நீர்மட்டம் 45 அடியை நெருங்கியுள்ளது. அப்பகுதியில் 4 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலை தோட்டப் பகுதிகளில் தொடர்ந்து 2-வது நாளாக கனமழை கொட்டித்தீர்த்தது. ஊத்து எஸ்டேட்டில் 17 சென்டிமீட்டர், நாலுமுக்கு எஸ்டேட்டில் 16 சென்டிமீட்டர், காக்காச்சியில் 15 சென்டிமீட்டர், மாஞ்சோலையில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், இன்று 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அருவியை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதேநேரம் அக்ஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், விடுமுறை நாளான இன்று மக்கள் அதிக அளவில் குவிந்தனர்.
தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து 3-வது நாளாக சாரல் மழை பெய்து வருகிறது. செங்கோட்டை, தென்காசி, ஆய்குடி, சிவகிரி உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குற்றாலம் பகுதியில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக ஐந்தருவியின் 3 கிளைகளிலும் தண்ணீர் கொட்டியதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்தது.அணைகளில் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. குண்டாறு அணை நீர்மட்டம் 17½ அடியில் இருந்து 19 அடியாக உயர்ந்துள்ளது. கருப்பாநதி அணை நீர்மட்டமும் 1½ அடி உயர்ந்து 34½ அடியை எட்டியுள்ளது.