தமிழக செய்திகள்

சிறுமிகளின் கால்களை தொடுவதா?... அமைச்சர் விஸ்வநாதனுக்கு வலுக்கும் கண்டனம்

மாரத்தான் போட்டியை உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.

மதுரை,

மாரத்தான் ஓட்டம்

முதல்-அமைச்சர் விஜய் பிறந்தநாளையொட்டி கடந்த 21-ந்தேதி மதுரை மாவட்டம் மேலூரில் த.வெ.க. சார்பில் அரசு பள்ளி மைதானத்தில் மாரத்தான் போட்டி நடந்தது. இதை உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். அப்போது மேடையில் த.வெ.க. பெண் நிர்வாகி ஒருவருடன் சினிமா பாடலுக்கு அமைச்சர் விஸ்வநாதன் நடனம் ஆடினார். இது பேசுபொருளாக மாறியது.

இந்நிலையில் மாரத்தான் போட்டி முடிந்து, அதில் ஓடி வந்த சிறுமிகள் சிலர் மேடையில் அமர்ந்து கால்களை நீட்டி இளைப்பாறி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அமைச்சர் விஸ்வநாதன், ஒரு சிறுமியின் கால்களை அமுக்கி விட்டும், மற்றொரு சிறுமிக்கு, கால் விரல்களுக்கு சுளுக்கு எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பான வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொது இடத்தில் சிறுமிகளின் கால்களை எப்படி தொடலாமா? என கண்டனங்கள் வலுத்துள்ளன.

இதுகுறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கூறியதாவது:-

மேலூரில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் அ.தி.மு.க. மற் றும் தி.மு.க. ஆளுங்கட்சியாக இருந்த போது அவர்களது நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இப்போது த.வெ.க. நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. யார் ஆளும் கட்சியாக உள்ளார்களோ அவர்கள் மட்டும் அத்துமீறுவதை அனுமதிக்க முடியாது. அதே போல் அமைச்சரின் நடவடிக்கை என்பது விமர்சனத்துக் கும் விவாததுக்கும் மாறியிருக்கிறது. அதை கவனத்தில் எடுத் துக்கொள்ள வேண்டும் எனபதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் மேலூர் தொகுதி மக்கள் முன்னேற்ற இயக்க தலைவர் மீ.முருகனும், அமைச்சரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், அமைச்சர் விஸ்வநாதன் நடனம் ஆடியதும், மாரத்தான் போட்டியில் பங்கேற்ற சிறுமிக்கு காலில் சுளுக்கு எடுத்ததை பார்க்கும்போது மனது வருத்தம் அடைய செய்கிறது. மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய அமைச்சர் இப்படி செய்தால் என்ன செய்வது? என தெரிவித்து உள்ளார். இதேபோல் சமூக வலைத்தளங்களிலும் அமைச்சருக்கு கண்டனம் எழுந்துள்ளது.