தமிழக செய்திகள்

நீலகிரி: சட்டசபைதேர்தல் காரணமாக மூடப்பட்டிருந்த சுற்றுலாத் தலங்கள் இன்று மீண்டும் திறப்பு

நீலகிரி வன கோட்டத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் மூடப்படுவதாக வனத்துறை நேற்று அறிவித்தது.

நீலகிரி,

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று ஒரே கட்டமாக நடந்தது. நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் மூடப்படாது என மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா அறிவித்து இருந்தார். இந்தநிலையில் நேற்று தேர்தலை முன்னிட்டு, நீலகிரி வன கோட்டத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்தது.

இதன்படி தொட்டபெட்டா மலைச்சிகரம், அவலாஞ்சி, பைன்பாரஸ்ட், பைக்காரா நீர்வீழ்ச்சி, பைக்காரா படகு இல்லம் ஆகிய 5 சுற்றுலா தலங்கள் மற்றும் சூழல் சுற்றுலா குழுக்கள் மூலம் நடத்தப்படும் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன.

முன்னறிவிப்பு இல்லாமல் இந்த சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால், கேரளம், கர்நாடகா மாநிலங்களில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். சுற்றுலா தலங்கள் முன்பு நின்று புகைப்படங்களை எடுத்துக்கொண்டு, சிறிது நேரம் இளைப்பாறி விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இந்தநிலையில், தமிழகத்தில் வாக்குப்பதிவு நிறைவை அடுத்து, தேர்தல் நன்நடத்தை விதிகளில் தளர்வு அறிவிக்கப்பட்டது. பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழு திரும்ப பெறப்பட்டன. இதனையடுத்து

நீலகிரியில் சட்டசபை தேர்தல் காரணமாக நேற்று மூடப்பட்டிருந்த சுற்றுலாத் தலங்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை காரணமாக அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.