தமிழக செய்திகள்

பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

குளிக்க அனுமதி அளித்திருப்பதால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உடுமலை,

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்திமலையில் பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இதன் அருகே இயற்கை எழில் கொஞ்சும் பஞ்சலிங்க அருவியும் உள்ளது. ஆன்மிக சிறப்பு வாய்ந்த இந்த பகுதிக்கு திருப்பூர், கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

3 மாதங்களாக நீர்வரத்து இல்லை

கடந்த சில மாதங்களாக திருமூர்த்திமலை மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவியது. இதன் காரணமாக பஞ்சலிங்க அருவிக்கு வரும் நீர்வரத்து முற்றிலும் நின்றது.

சுமார் 3 மாதங்களுக்கு மேலாக அருவியில் தண்ணீர் இல்லாமல் பாறைகள் மட்டுமே வறண்டு காணப்பட்டன. இதனால் தொலைதூரங்களில் இருந்து ஆன்மிக பயணமாகவும், சுற்றுலாவுக்காகவும் திருமூர்த்திமலைக்கு வந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

திடீர் பலத்த மழை

இந்த நிலையில், நேற்று இரவு பஞ்சலிங்க அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அடர்ந்த வனப்பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகளில் திடீரென பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நள்ளிரவு முதல் அருவிக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது.

இன்று அதிகாலை வறண்டு கிடந்த பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் வரத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் நீர்வரத்து அதிகரித்து, அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டத் தொடங்கியது.

குளிக்க அனுமதி

தற்போது அருவிக்கு வரும் தண்ணீர் தெளிவாகவும், பாதுகாப்பான அளவிலும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று காலை முதல் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அருவியில் இறங்கி புனித நீராட வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு பஞ்சலிங்க அருவியில் மீண்டும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதையும், அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதையும் அறிந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வார விடுமுறை நாட்களில் அருவியில் குளிப்பதற்காகவும், இயற்கை அழகை ரசிப்பதற்காகவும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT